India vs England Lords Test: விராட் கோலி ஓய்வு, ரோஹித் சர்மா ஓய்வு, புஜாரா கிடையாது, ரஹானே கிடையாது, இஷாந்த் சர்மா – முகமது ஷமி கிடையாது, இங்கிலாந்தில் வொயிட் வாஷ் ஆகப்போகிறது என சுப்மான் கில் தலைமையிலான இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, கில்லை கேப்டனாக நியமித்ததற்கும் கேள்விகள் எழுந்தன.
IND vs ENG: பதிலடி கொடுத்த இந்திய அணி
ஆனால், ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே பெரும்பாலான விமர்சனங்களுக்கு இந்திய அணி பதிலடி கொடுத்தது எனலாம். இருப்பினும் முதல் போட்டியில் அடைந்த தோல்வி சற்று பின்னடைவை கொடுத்தது. வட்டியும் முதலுமாக பேட்டிங் – பந்துவீச்சு என அனைத்திலும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்தை இரண்டாவது போட்டியில் வீழ்த்தியிருக்கிறது.
IND vs ENG: இங்கிலாந்தின் அணுகுமுறை சிக்கல்
அதிரடி பேட்டிங் அணுகுமுறையை இங்கிலாந்து கடைபிடிக்க தொடங்கிய பின்னர் அந்த அணி போட்டியை டிரா செய்யும் நோக்கில் விளையாடியதே இல்லை. வெற்றி இல்லையெனில் தோல்வி என்ற மனநிலையில் இங்கிலாந்து விளையாடி வருகிறது. இது கடும் விமர்சனத்தை சந்திருந்தாலும் இங்கிலாந்து அந்த அணுகுமுறையை கைவிடாது என்பது மட்டும் உறுதி. தற்போதைய அணியில் ஜோ ரூட்டை தவிர்த்து அனைவருமே வெள்ளைப் பந்து கிரிக்கெட்டை விளையாடும் அணுகுமுறையில்தான் விளையாடி வருகின்றனர்.
IND vs ENG: தட்டையான ஆடுகளம்
இவர்களின் இந்த அதிரடி பாணி பேட்டிங்கிற்காக ஆடுகளத்தையும் தட்டையாக தயார் செய்கின்றனர். இந்த தட்டையான ஆடுகளங்கள் பந்துவீச்சாளர்களுக்கு எந்த வகையிலும் கைக்கொடுப்பதில்லை. இந்திய பேட்டர்கள் இதை சாதகமாக வைத்து 1000+ ரன்களை குவித்தனர். பேட்டர்கள் அவசரப்பட்டதாலும், இந்தியாவின் அசத்தலான பந்துவீச்சாலுமே இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியது. புதிய பந்தில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களால் பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்தி இந்திய பேட்டர்களின் விக்கெட்டை எடுக்க முடிவதில்லை.
IND vs ENG: புதிய பந்தில் யார் கில்லி… புள்ளிவிவரம் இதோ!
இந்திய அணி 2வது டெஸ்டில் பந்து புதியதாக இருக்கும்போது 27% சீம்/ஸ்விங் செய்தது. 6 மெய்டன் ஓவர்களை வீசியது. எகானமி 2.7 ஆக இருந்தது. இதன்மூலம் 9 விக்கெட்டை கைப்பற்றியது. மாறாக, இங்கிலாந்து அணி பந்து புதியதாக இருக்கும்போது 22 சதவீதமே சீம்/ஸ்விங் செய்தனர். 2 மெய்டன் ஓவர்களையே வீசினர். எகானமியும் 3.3 ஆக இருந்தது. இதனால் 2 விக்கெட்டை மட்டுமே அவர்களால் கைப்பற்றவும் முடிந்தது. இந்த புள்ளிவிவரங்களை கிரிக்கெட் வீரர் அஸ்வின் அவரது யூ-ட்யூப் பக்கங்களில் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
IND vs ENG: புற்கள் நிறைந்த ஆடுகளம்
எனவே, இங்கிலாந்து அணி லார்ட்ஸ் டெஸ்டில் ஆடுகளத்தில் அதிக புற்களுடன் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. போட்டி ஜூலை 10ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், ஜூலை 8ஆம் தேதி (நேற்று) வெளியான ஆடுகளத்தின் புகைப்படத்தை பார்த்தால், ஆடுகளம் பச்சைப்பசேல் என இருக்கிறது. ஆடுகளத்தில் புற்கள் அதிகமாக இருந்தால் அது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். பேட்டர்கள் ரன்கள் அடிப்பது எளிதல்ல. ஆடுகளத்தில் சீம்/ஸ்விங் அதிகம் இருக்கும்.
IND vs ENG: இங்கிலாந்து அணி செய்த ஒரே ஒரு மாற்றம்
கடந்த மாதம் நடந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கொடுக்கப்பட்ட ஆடுகளத்தை போன்றே இங்கிலாந்து அணி ஆடுகளத்தை பெற விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இங்கிலாந்து அணி அவர்களின் ஸ்பெஷல் ஆயுதமாக ஜோப்ரா ஆர்ச்சரை அவர்களின் பிளேயிங் லெவனில் சேர்த்துள்ளனர். இங்கிலாந்து அணி அதன் பிளேயிங் லெவனை இன்று (ஜூலை 9) அறிவித்தது. ஜாஷ் டங்கிற்கு ஓய்வளிக்கப்பட்டு ஆர்ச்சருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.
IND vs ENG: இங்கிலாந்தின் 2 ஆயுதங்கள்
தற்போது தொடர் 1-1 என்ற நிலையில் சமன்பெற்று இருப்பதால், புற்கள் நிறைந்த ஆடுகளம் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகிய இரண்டு ஆயுதங்களை கொண்டு இந்தியாவை வீழ்த்தி தொடரில் முன்னிலை பெற திட்டமிட்டுள்ளது. புற்கள் நிறைந்த ஆடுகளத்தில் ஆர்ச்சருக்கு பந்து புதியதாக இருக்கும்போது அதிக சீம்/ஸ்விங் கிடைக்கும் என்பதால் கேஎல் ராகுல், ஜெய்ஸ்வால், கருண் நாயர், சுப்மான் கில் உள்ளிட்ட டாப் ஆர்டர் பேட்டர்கள் ரன் அடிப்பது கடினமாகலாம்.
3வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன்
பென் டக்கெட், ஜாக் கிராலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஷோயப் பஷீர்.
மேலும் படிக்க | IND vs ENG: பயிற்சியில் முக்கிய வீரருக்கு காயம்! 3வது டெஸ்டில் திடீர் மாற்றம்?