முன்னாள் வெளியுறவு செயலர் உட்பட மாநிலங்களவைக்கு 4 எம்.பி.க்களை நியமித்தார் குடியரசு தலைவர்

புதுடெல்லி: மாநிலங்களவையில் 4 எம்.பி.க்களின் நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களில் 233 பேர் மாநிலங்கள், யூனியன் பிரதேச எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எஞ்சிய 12 எம்.பி.க்களை மத்திய அரசின் பரிந்துரை அடிப்படையில் குடியரசு தலைவர் நியமிக்கிறார். இலக்கியம், அறிவியல், சமூக சேவை,பொது வாழ்க்கை என பல துறைகளில் நாட்டுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கி வருபவர்கள் எம்.பி.க்களாக நியமிக்கப்படுகின்றனர்.

இதில் முதல் கட்டமாக மூத்த அரசு வழக்கறிஞர் உஜ்வல் தியோரா நிகம், முன்னாள் வெளியுறவு செயலர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா, சமூக சேவகர் சி.சதானந்தன், வரலாற்று ஆய்வாளர் மீனாட்சி ஜெயின் ஆகிய 4 பேரை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார். இத்தகவலை உள்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி வாழ்த்து: இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, பிரதமர் மோடி தனது வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: தீவிரவாத, கிரிமினல் வழக்குகளை திறம்பட நடத்தியவர் வழக்கறிஞர் உஜ்வல் நிகம். முக்கிய வழக்குகளில் நீதியை பெற்று தருவதில் அவரது பங்கு மிகப் பெரியது. வெளியுறவு துறை செயலராக, தூதராக செயல்பட்டவர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா. அமெரிக்கா மற்றும் வங்கதேசத்துக்கான இந்திய தூதராக பணியாற்றியவர். கடந்த 2023-ல் ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமையேற்றபோது, முக்கிய பங்காற்றினார்.

வரலாற்று ஆய்வாளர் மீனாட்சி ஜெயின், பத்மஸ்ரீ விருது பெற்றவர்.இந்திய வரலாறு, கல்வி, கலாச்சாரம் பற்றிய அவரது ஆழ்ந்த அறிவு மற்றும் அவை தொடர்பாக அவர் எழுதிய கட்டுரைகள், நூல்கள் கல்வித் துறையை மேலும் வளப்படுத்தி உள்ளது. கேரள சமூக சேவகர் சி.சதானந்த மாஸ்டர். கடந்த 1994-ல் அரசியல் ரீதியாக அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 கால்களையும் இழந்தார். வன்முறை, மிரட்டல்களுக்கு அஞ்சாமல் சமூக சேவை செய்து வருகிறார். அவரது சேவை மிகவும் பாராட்டுக்குரியது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.