மோட்டிஹரி: நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலங்கள் வளர்ச்சி பெறுவதற்கு பிஹார் வளர்ந்த மாநிலமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், “20 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பிஹாரில் லட்சாதிபதிகளாக முன்னேறி இருக்கிறார்கள். இது மத்திய அரசின் நடவடிக்கைக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி” என்று பெருமிதமாக கூறியுள்ளார்.
பிஹாரின் மோடிஹரி நகரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கடந்த காலத்தில் மேற்கத்திய நாடுகள் வளர்ச்சி கண்டதைப் போல தற்போது கிழக்கு நாடுகள் வளர்ந்து வருகின்றன. நாட்டின் கிழக்குப் பகுதி வளர்ச்சி பெறுவதற்கு, பிஹார் வளர்ந்த மாநிலமாக இருக்க வேண்டும். மோட்டிஹரியை நாம் மும்பையைப் போல உருவாக்க வேண்டும்.
முந்தைய காங்கிரஸ் – ஆர்ஜேடி கூட்டணி அரசைப் போல அல்ல நாங்கள். பிஹாரின் வளர்ச்சிக்காக எங்கள் அரசாங்கம் அதிக நிதியை வழங்கி உள்ளது. இன்று, ஏழைகளுக்கான நலத்திட்டங்கள் அவர்களை நேரடியாகச் செல்கின்றன. பிஹாரின் மக்கள் தொகை நார்வே, சிங்கப்பூரைவிட அதிகம். இங்குள்ள ஏழை மக்களுக்கு நாங்கள் சிறந்த வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளோம். 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பிஹாரில் லட்சாதிபதிகளாக முன்னேறி இருக்கிறார்கள். பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி இது.
பிஹார் வளமாக இருந்தால், நாடு வளமாக இருக்கும். பிஹார் இளைஞர்கள் வளமாக இருந்தால், பிஹார் வளமாக இருக்கும். இதைக் கருத்தில் கொண்டே மத்திய அரசுக்கு ஆதரவாக நிதிஷ் குமார் அரசு செயல்படுகிறது. இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது.
எங்கள் தீர்மானம் என்னவென்றால், வரும் காலத்தில் மேற்கே மும்பை இருப்பதைப் போல் கிழக்கே மோட்டிஹாரி திகழ வேண்டும். குருகிராமில் வாய்ப்புகள் இருப்பதைப் போலவே, கயாவிலும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். புனேவைப் போலவே, பாட்னாவில் தொழில்துறை வளர்ச்சி இருக்க வேண்டும். சூரத்தைப் போல, சந்தால் பர்கானா உருவாக வேண்டும். ஜெய்ப்பூரைப் போலவே, ஜல்பைகுரி மற்றும் ஜஜ்பூரில் சுற்றுலா மேம்பட வேண்டும். பெங்களூரைப் போலவே, விர்பம் மக்களும் முன்னேற வேண்டும்.
இன்று பிஹாரில் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏனெனில் மத்தியிலும், மாநிலத்திலும் பிஹாருக்கான அரசாங்கம் உள்ளது. காங்கிரஸ் – ஆர்.ஜே.டி கூட்டணி ஆட்சிக் காலத்தில், அதாவது 2004 – 2014 வரை மத்திய அரசிடம் இருந்து பிஹாருக்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே கிடைத்தது. காரணம், அவர்கள் இங்குள்ள நிதிஷ் குமார் அரசாங்கத்தை வழிவாங்கிக் கொண்டிருந்தார்கள்.
2014-ல், மத்தியில் பணியாற்றும் வாய்ப்பை நீங்கள் எனக்கு வழங்கினீர்கள். நான் வந்த பிறகு பழிவாங்கும் அரசியலுக்கு முடிவு கட்டினேன். கடந்த 10 ஆண்டுகளில், மத்திய அரசு பிஹாரின் வளர்ச்சிக்காக கடந்த யுபிஏ ஆட்சியில் வழங்கப்பட்டதைவிட பல மடங்கு அதிக நிதியை வழங்கி உள்ளது” என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், ஆளுநர் ஆரிப் முகம்மது கான், முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சாம்ரத் சவுத்ரி, மத்திய, மாநில அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.