கொல்கத்தா,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் நிறைவு பெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த சீசன் முடிவடைந்த சில தினங்களிலேயே அடுத்த சீசனுக்கான பேச்சுகள் எழ ஆரம்பித்து விட்டன.
ஒவ்வொரு அணி நிர்வாகமும் அடுத்த சீசனுக்காக தங்களது அணிகளை தற்போதே தயார்படுத்தும் வேளையில் இறங்கி உள்ளன. ஏற்கனவே ராஜஸ்தான் அணியிலிருந்து சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. மற்ற அணிகளும் பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களின் மாற்றங்கள் குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்பட்டன.
அந்த வரிசையில் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இணைந்துள்ளது. அந்த அணியில் இடம்பெற்றுள்ள ஆல் ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை கழற்றிவிட்டு அவருக்கு பதிலாக வேறு ஒரு வீரரை டிரேடிங் முறையில் வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, கடந்த சீசனில் ரூ.23.75 கோடிக்கு வாங்கப்பட்ட வெங்கடேஷ் ஐயருக்கு பதிலாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷனை டிரேடிங் முறையில் வாங்க கொல்கத்தா நிர்னாகம் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சீசனில் ரூ.23.75 கோடி என்ற பிரமாண்ட தொகைக்கு வாங்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் 11 போட்டிகளில் விளையாடி 142 ரன்கள் மட்டுமே அடித்தார். இது முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணிக்கு பலத்த பின்னடைவாக அமைந்தது.
மறுபுறம் ரூ.11.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் வாங்கப்பட்ட இஷான் கிஷன் இந்த சீசனில் ஒரளவு சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார். 14 ஆட்டங்களில் விளையாடி 354 ரன்கள் அடித்திருந்தார்.