நாமக்கல்: “வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதன் ஒரே நோக்கம் திமுகவை ஆட்சியில் இருந்து விரட்டுவதுதான். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி, என்பதை அறிவித்துவிட்டோம். இதில் எவ்விதமான குழப்பமும் இல்லை.” என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
மேலும், சாதாரண மக்களை ஏமாற்றி கிட்னி விற்பனையில் ஈடுபடுபவர்களை முழுமையாக கண்டறிய சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் மறைந்த பாஜக மாநில பொது செயலாளர் சேலம் ஆடிட்டர் ரமேஷின் 12ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு ஆடிட்டர் ரமேஷின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி பேசியதாவது: ‘பாஜகவின் கொள்கைகளை மேலும் வலுப்படுத்தி, கட்சியின் சித்தாந்தங்களை இளைஞர்களிடம் கொண்டு செல்வதற்காக, இக்கட்சிக்காக உழைத்த முன்னோடிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட சேலம் ஆடிட்டர் ரமேஷ் கட்சிப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். அவரது செயல்பாடுகளை தாங்க முடியாமல் சிலர் அவரை கொலை செய்தனர்.
அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்தவர்கள், கொலையாளிகளை உடனடியாக கண்டுபிடித்து விசாரணை செய்யவில்லை. கொலையாளி அடையாளம் காணப்பட்ட பிறகு, மேலும் சில அமைப்பும் தாங்கள்தான் அந்த கொலை செயலில் ஈடுபட்டதாக கூறினார்கள். உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் ஆடிட்டர் ரமேஷ் குடும்பத்திற்கு கட்சி மூலம் உரிய உதவிகளை வழங்கினார். தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணையை மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பாஜவினர் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். விரைவில் நீதி கிடைக்கும்” என்றார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்களை ஏமாற்றி, ஆசை வார்த்தை கூறி அவர்களின் கிட்னியை முறைகேடாக பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ள சம்பவத்தில், ஆளும் திமுக நிர்வாகிகள் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஒரு நிறுவனம் போல மருத்துவர்கள், அரசு அலுவலர்கள், இடைத்தார்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து, ஏழை விசைத்தறி தொழிலாளர்களை ஏமாற்றி, இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக தமிழ்நாடு அரசு சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து மோசடியில் ஈடுபட்டவர்களை முழுமையாக கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்திரிகையாளர்களை அழைத்து பிரஸ்மீட் நடத்தும் அளவிற்கு ஒரு டிஎஸ்பி சென்றுள்ளார் என்றால், அந்தத் துறையில் எவ்வளவு அத்துமீறல்கள் நடந்திருக்கிறது என தெரியவந்துள்ளது. இதுகுறித்து எதுவும் விசாரிக்காமல் அவரை சஸ்பெண்ட் செய்வது நியாயம் அல்ல.
கள்ளச்சாராய தடுப்பில் முழு வீச்சில் செயல்பட்ட ஒரு டிஎஸ்பியை சஸ்பெண்ட் செய்வது ஏற்கத்தக்கதல்ல. இந்தச் சம்பவம் தமிழகத்தில் அரசு நிர்வாகம் சீர்குலைந்துள்ளதை காட்டுகிறது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு சம்பந்தப்பட்ட டிஎஸ்பிக்கு நியாயமும் நீதியும் வழங்க வேண்டும்.
வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதன் ஒரே நோக்கம் திமுகவை ஆட்சியில் இருந்து விரட்டுவதுதான். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி, என்பதை அறிவித்துவிட்டோம். இதில் எவ்விதமான குழப்பமும் இல்லை. காமராஜரை விமர்சித்ததையடுத்து திமுக கூட்டணியில் தொடரலாமா அல்லது விலகலாமா என்ற நிலையில் காங்கிரஸ் கட்சியினர் உள்ளனர்” இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட பாஜ தலைவர் சத்தியமூர்த்தி, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் ஹரிஹரகோபாலன், சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.