மான்செஸ்டர்,
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லண்டன் லார்ட்சில் நடந்த 3-வது டெஸ்டில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், துணை கேப்டனுமான ரிஷப் பண்ட் பாய்ந்து விழுந்து பந்தை பிடிக்க முயற்சித்தபோது, இடதுகை ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது.
அதன் பிறகு அந்த ஆட்டம் முழுவதும் அவர் விக்கெட் கீப்பிங் செய்ய வரவில்லை. இதனால் துருவ் ஜூரெல் விக்கெட் கீப்பர் பணியை கவனித்தார். ஆனால் பண்ட் பேட்டிங் மட்டும் செய்தார். மான்செஸ்டரில் வருகிற 23-ந்தேதி தொடங்கும் 4-வது டெஸ்டிலும் அவர் விக்கெட் கீப்பிங் செய்வது சந்தேகம்தான். இதனால் அவர் ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் ஆடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இருப்பினும் பல முன்னாள் வீரர்கள் ரிஷப் பண்டை முழுநேர பேட்ஸ்மேனாக ஆட வைக்க கூடாது என்று கூறிவருகின்றனர். இதனிடையே இந்திய துணை பயிற்சியாளரான ரையான் டென் டஸ்சாட், ரிஷப் பண்ட் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்றும் ஆட்டத்தின் நடுவில் விக்கெட் கீப்பரை மாற்றும் சூழ்நிலையை விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். இதனால் ரிஷப் பண்ட் விஷயத்தில் குழப்பம் நிலவி வருகிறது.
இந்நிலையில் 4-வது போட்டியில் ரிஷப் பண்டுக்கு பதிலாக துருவ் ஜூரெல் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மான்செஸ்டரில் இன்னும் ரிஷப் பண்ட் பயிற்சியை தொடங்கவில்லை. மருபுறம் துருவ் ஜூரெல், பீல்டிங் பயிற்சியாளருடன் இணைந்து தீவிரமாக கீப்பிங் பயிற்சி மேற்கொண்டு வரும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதன் காரணமாக ரிஷப் பண்டுக்கு 4-வது போட்டியில் ஓய்வளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதன் காரணமாக துருவ் ஜூரெல் பிளேயிங் லெவனில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.