India vs England: சுப்மான் கில் தலைமையிலான இந்திய ஆடவர் சீனியர் கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், இங்கிலாந்து அணி உடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை (Anderson Tendulkar Trophy) தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது.
லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி (Team England) 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, பர்மிங்காம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்ட்ன் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 330 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
India vs England: தொடரில் இங்கிலாந்து முன்னிலை
தொடர் சமநிலையில் இருந்த நிலையில் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த ஜூலை 10ஆம் தேதி தொடங்கிய 3வது டெஸ்ட் மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. முதலிரண்டு போட்டிகளை போன்று இந்த போட்டியும் 5வது நாள் வரை சென்றது. முதலிரண்டு போட்டிகளிலும் இலக்கை டிஃபண்ட் செய்த இந்திய அணி (Team India), இந்த போட்டியில் சேஸிங் செய்தது. 193 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு ஜடேஜா கடைசி வரை போராடினாலும் கூட 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் டெஸ்ட் தொடர் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.
India vs England: இந்திய அணியில் நடக்கப்போவது என்ன?
அந்த வகையில், இந்திய அணி அடுத்தடுத்த போட்டிகளில் வென்று தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. இதனால் கடுமையான வலைப்பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. 4வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவார் என ஏறத்தாழ உறுதியாகி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் கடந்த போட்டியில் காயத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் இப்போட்டியில் விளையாடுவாரா இல்லையா என்ற சந்தேகம் பலமாக உள்ளது. அதே நேரத்தில் இந்திய அணி கருண் நாயருக்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பளிக்குமா, நம்பர் 3இல் புதிய வீரரை முயற்சிக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
மறுமுனையில், குல்தீப் யாதவின் (Kuldeep Yadav) நீண்ட கால காத்திருப்பது இந்த போட்டியிலாவது முடிவுக்கு வருமா என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி குல்தீப் யாதவிற்காக நிதிஷ் குமார் ரெட்டியை விடுவித்து மூன்று சுழற்பந்துவீச்சாளர்களுடன் செல்லுமா அல்லது வாஷிங்டன் சுந்தருக்கு ஓய்வு கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவார் என்றால் இதுதான் இத்தொடரில் விளையாடும் கடைசி போட்டியாக இருக்கும். வேலைப்பளு காரணமாக 5 போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று போட்டிகளில்தான் விளையாடுவார் என முன்னரே சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Arshdeep Singh Injury: அர்ஷ்தீப் சிங்கிற்கு காயம்
இதனால், ஸ்குவாடில் இன்னொரு வேகப்பந்துவீச்சாளரின் தேவை அதிகரித்துள்ளது. சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் தற்போது பிளேயிங் லெவனில் உள்ளனர். பிரசித் கிருஷ்ணா முதலிரண்டு போட்டிகளிலும் சொதப்பிவிட்டார். அப்படியிருக்க இடதுகை வேகப்பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங்தான் பும்ராவுக்கு மாற்று வீரராக வருவார் என கூறப்பட்டது. ஆனால் கடந்த சில நாள்களுக்கு முன் வலைப்பயிற்சியில் சாய் சுதர்சன் அடித்த பந்தை பிடிக்கப்போகும் போது அர்ஷ்தீப் சிங்கிற்கு காயம் (Arshdeep Singh Injury) ஏற்பட்டது, இது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது எனலாம்.
Arshdeep Singh Replacement: அர்ஷ்தீப் அவுட்… அன்ஷுல் இன்…
இந்நிலையில், அர்ஷ்தீப் சிங்கிற்கு (Arshdeep Singh) பதில் இந்திய அணியில் அன்ஷுல் கம்போஜ் சேர்க்கப்பட்டிருப்பதாக பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. அர்ஷ்தீப் சிங் கையில் பலத்த வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் காயம் குணமடைய 10 நாள்களாகும் என்பதால் அவருக்கு பதில் அன்ஷுல் கம்போஜ் சேர்க்க தேர்வுக்குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
– Anshul Kamboj has been added to India’s Test squad for the ongoing England Tests. (Express Sports). pic.twitter.com/ldwA3PeyoB
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 20, 2025
அன்ஷுல் கம்போஜ் (Anshul Kamboj) இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இந்திய ஏ அணியில் இடம்பெற்றிருந்தார். 2 போட்டிகளில் 5 விக்கெட்டை அவர் கைப்பற்றினார். மேலும், ஹரியானா அணிக்காக 24 முதல்தர போட்டிகளில் 79 விக்கெட்டை சரித்துள்ளார். அன்ஷுல் கம்போஜ் 4வது போட்டியில் இல்லாவிட்டாலும் 5வது போட்டியில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. அன்ஷுல் கம்போஜ் ஐபிஎல் தொடரில் தற்போது சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார்.