ஹராரே,
ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே – தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பிரையன் பென்னட் 61 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் கார்பின் போஷ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. அந்த அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன பிரிட்டோரியஸ் 4 ரன்களிலும், ரீசா ஹெண்ட்ரிக்ஸ் 6 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.
இந்த நெருக்கடிக்கு மத்தியில் கை கோர்த்த கேப்டன் ரஸ்ஸி வான் டெர் டுசென் – ரூபின் ஹெர்மன் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. இவர்களில் வான் டெர் டுசென் நிதானமாக விளையாட ஹெர்மன் அதிரடியாக விளையாடினார். வெறும் 36 பந்துகளை எதிர்கொண்ட அவர் 63 ரன்கள் அடித்த நிலையில் இலக்கை நெருங்கிய தருவாயில் ஆட்டமிழந்தார்.
முடிவில் 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 145 ரன்கள் அடித்த தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரஸ்ஸி வான் டெர் டுசென் 52 ரன்களுடனும், பிரெவிஸ் 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஜிம்பாப்வே தரப்பில் மபோசா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த தொடரில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி கண்ட ஜிம்பாப்வே இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. மறுபுறம் தென் ஆப்பிரிக்கா (3 போட்டிகளில் 2 வெற்றி) மற்றும் நியூசிலாந்து (2 போட்டிகளில் 2 வெற்றி) அணிகள் முறையே தலா 4 புள்ளிகள் எடுத்துள்ளதால் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. ஜிம்பாப்வே தனது கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்றாலும் 2 புள்ளிகள் மட்டுமே பெற முடியும் என்பதால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.