புதுடெல்லி: நம்பியோ தரவுத் தளம் வெளியிட்டுள்ள உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளை விட இந்தியா முன்னிலையில் உள்ளது.
நம்பியோ தரவுத் தளம் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் பாதுகாப்பான நாடுகள் பட்டியலை வெளியிடுகிறது. நம்பியோ பாதுகாப்பு குறியீட்டின்படி (Numbeo Safety Index) 2025-ம் ஆண்டில் உலகின் பாதுகாப்பான நாடாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையில் பைரனீஸ் மலையில் அமைந்துள்ள ஒரு சிறிய ஐரோப்பிய நாடான அன்டோரா உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமன் ஆகிய 3 மத்திய கிழக்கு நாடுகள், உலகின் மிகக் குறைந்த குற்ற விகிதம் மற்றும் வலுவான பாதுகாப்பு உள்கட்டமைப்பு கொண்ட முதல் ஐந்து நாடுகளில் இடம்பெற்றுள்ளன.
பாரம்பரியமாக பாதுகாப்பான நாடுகளாக கருதப்படும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளை விட இந்தியா இதில் முன்னிலையில் உள்ளது.
147 நாடுகளில், இந்தியா 55.7 புள்ளிகளுடன் 66-வது இடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்து 51.7 புள்ளிகளுடன் 87-வது இடமும் அமெரிக்கா 50.8 புள்ளிகளுடன் 89-வது இடமும் பிடித்துள்ளன.
தெற்காசிய நாடுகளில், சீனா 76.0 புள்ளிகளுடன் 15-வது இடத்தில் உள்ளது. இலங்கை 59-வது இடத்தையும், பாகிஸ்தான் 65-வது இடத்தையும், வங்கதேசம் 126-வது இடத்தையும் பிடித்துள்ளன.
நம்பியோ பாதுகாப்பு குறியீட்டின்படி அன்டோரா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், தைவான், ஓமன், ஐல் ஆப் மேன் (ஐரிஸ் கடல் தீவு), ஹாங்காங் (சீனா), ஆர்மீனியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன.
இந்த தரவரிசையில் 19.3 புள்ளிகளுடன் கடைசி இடத்தில், அதாவது மோசமான பாதுகாப்பு கொண்ட நாடாக வெனிசுலா உள்ளது. மோசமான பாதுகாப்பு கொண்ட நாடுகள் பட்டியலில் வெனிசுலா, பப்புவா நியூ கினியா, ஹைதி, ஆப்கானிஸ்தான், தென்னப்பிரிக்கா, ஹோண்டுராஸ், டிரினிடாட் & டொபாகோ, சிரியா, ஜமைக்கா, பெரு ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன.
பயனாளர்கள் அளிக்கும் தரவுகளை பயன்படுத்தி நம்பியோ பாதுகாப்பு குறியீடு தொகுக்கப்படுகிறது. குற்ற விகிதங்கள், பொது பாதுகாப்பு பற்றிய கருத்துகள், சமூக காவல் பணியில் உள்ள சவால்கள், தனிப்பட்ட பாதுகாப்பு கவலைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை பயன்படுத்தி பல்வேறு இடங்களின் பாதுகாப்பை மதிப்பிடுவதற்கான ஒப்பீட்டு கருவியாக இந்த குறியீடு பயன்படுகிறது.