பயங்கரவாதத்தில் மூழ்கிய நாடு பாகிஸ்தான் – ஐ.நா. சபையில் இந்தியா

நியூயார்க்,

பாகிஸ்தான் வெறித்தனம், பயங்கரவாதத்தில் மூழ்கியுள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தூண்டும் நாடுகள் கடுமையான விலை கொடுக்க வேண்டும் என இந்திய தூதர் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கூறினார்.

15 நாடுகள் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உயர்மட்ட விவாதம் நடைபெற்றது. பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறவு மந்திரியுமான இஷாக் தார், ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இந்த விவாதத்துக்கு தலைமை தாங்கினர். இந்த விவாதத்தில் உரையாற்றிய இஷாக் தார் சிந்து நதி நீர் ஒப்பந்தம், ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை குறித்து பேசினார்.

இஷாக் தாரின் கருத்துகளுக்கு பதிலடி கொடுத்து இந்தியாவின் நிரந்தர தூதர் பர்வதனேனி ஹரிஷ் பேசியதாவது:-

சர்வதேச அமைதி, பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து நாம் விவாதிக்கும்போது, உலகளவில் மதிக்கப்பட வேண்டிய சில அடிப்படை கொள்கைகளை அங்கீகரிப்பது அவசியம். அவற்றில் ஒன்று பயங்கரவாதத்துக்கு எதிராக பூஜ்ய சகிப்புத்தன்மை. இந்தியா ஒரு முதிர்ந்த ஜனநாயகம், வளர்ந்து வரும் பொருளாதாரம், பன்முகத்தன்மை சமுகம் கொண்ட நாடு. மறுபுறம் வெறித்தனம், பயங்கரவாதத்தில் மூழ்கி இருக்கும் பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து தொடர்ச்சியாக கடன் வாங்கும் நாடு.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தூண்டும் நாடுகள் கடுமையான விலை கொடுக்க வேண்டும். பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா தொடங்கியது.

ஐ.நா. பாதுகாப்பு சபையின் அறிக்கையில், இந்த கண்டிக்கத்தக்க பயங்கரவாத செயலுக்கு காரணமானவர்கள், அமைப்பாளர்கள், நிதியளிப்பவர்கள், ஆதரவாளர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டியதன் அவசியத்தை உறுப்பினர்கள் அடிக்கோடிட்டு காட்டினர். இந்தியாவின் பதிலடி அளவிடப்பட்டது.

சமீபத்திய 10 ஆண்டுகளில் மோதல்களின் தன்மை மாறியுள்ளது. இதனை கருத்தில் கொள்ளும்போது மாறிவரும் சூழ்நிலைகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக ஐ.நா. சபை குறித்து சந்தேகங்கள் அதிகரித்து வருகிறது. மறுசீரமைப்பு குறித்து கடுமையான கேள்வி எழுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, அமெரிக்க பிரதிநிதி டோரதி ஷியா கூட்டத்தில் பேசும்போது, ”கடந்த 3 மாதங்களில் மட்டும் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில், காங்கோ குடியரசு, ருவாண்டா, மற்றும் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான மோதல் அமெரிக்கா நிறுத்தியது. ஜனாதிபதி டிரம்பின் தலைமையின் கீழ் அமெரிக்கா இந்த முடிவுகளை எட்டுவதற்கு முக்கிய பங்கு வகித்தது” என கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.