டெஸ்ட் கிரிக்கெட்: டான் பிராட்மேனின் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த ஜோ ரூட்

மான்செஸ்டர்,

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 114.1 ஓவர்களில் 358 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 46 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 225 ரன்கள் அடித்திருந்தது. ஆலி போப் 20 ரன்களுடனும், ஜோ ரூட் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தொடக்க ஆட்டக்காரர்களான ஜாக் கிராவ்லி 84 ரன்களிலும், பென் டக்கட் 94 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இத்தகைய சூழலில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. ஜோ ரூட் சிறப்பாக பேட்டிங் செய்து சதமடித்து அசத்தினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஆலி போப் 71 ரன்களிலும், ஹாரி புரூக் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ஜோ ரூட்டுடன் கேப்டன் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார். ஜோ ரூட் 150 ரன்களை நெருங்கி வருகிறார். ஸ்டோக்ஸ் அரைசதம் கடந்த நிலையில் களத்தில் உள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் ஜோ ரூட் அடித்த 9-வது டெஸ்ட் சதம் இதுவாகும். இதன் மூலம் சொந்த மண்ணில் ஒரு அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார். இதற்கு முன்னர் டான் பிராட்மேன் இங்கிலாந்துக்கு எதிராக 8 சதங்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது பிராட்மேனின் சாதனையை முறியடித்துள்ள ஜோ ரூட் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.