இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் பல்வேறு வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். இது இந்திய அணிக்கு பெரிய சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியிலும் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திற்கு கால்விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் விலகியுள்ளார். இதனால், பிசிசிஐ இஷான் கிஷனை மாற்று வீரராக தேர்வு செய்ய முயற்சித்தது. ஆனால் அவரும் கணுக்கால் காயம் காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் என். ஜெகதீசன் ரிஷப் பந்த் இடத்தில் சேர்க்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் படிங்க: குப்பை பந்துவீச்சு’ பும்ராவை விளாசி தள்ளிய ரவி சாஸ்திரி
வரும் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4 வரை ஓவல் மைதானத்தில் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. 4வது டெஸ்ட் ட்ராவில் முடிந்தால் இந்தியாவுக்கு தொடரை சமன் செய்ய 5வது டெஸ்ட் வெற்றி மிகவும் முக்கியம். ரிஷப் பந்த் காயம் இந்திய அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிறிஸ் வோக்ஸின் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்றபோது கால்விரலில் காயம் ஏற்பட்டது. ஸ்கேன் ரிப்போட்டில் எலும்பு முறிவு உறுதியாகியதால் அவர் 6 வாரங்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். பந்த் இந்த தொடரில் 462 ரன்கள் எடுத்து, இரண்டாவது அதிக ரன் குவித்தவராக உள்ளார். அவரது இழப்பு இந்தியாவின் பேட்டிங் வரிசையை பலவீனப்படுத்தும். துருவ் ஜூரல் தற்போது விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார்.
ரிஷப் பந்த் இடத்தில் இஷான் கிஷன் தான் முதல் தேர்வாக இருந்தார். அவர் அவரும் சமீபத்தில் ஸ்கூட்டரில் இருந்து விழுந்து கணுக்கால் காயம் அடைந்துள்ளார். இஷான், சமீபத்தில் நாட்டிங்ஹாம் கவுண்டி அணியுடன் குறுகிய கால ஒப்பந்தம் செய்து 87 மற்றும் 77 ரன்கள் எடுத்து சிறப்பாக செயல்பட்டிருந்தார். நீண்ட நாட்களாக இந்திய அணியில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வரும் இஷான் கிஷனுக்கு இந்த வாய்ப்பும் தற்போது பறிபோகி உள்ளது.
ஜெகதீசனின் பின்னணி
29 வயதான என். ஜெகதீசன் தமிழ்நாடு அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஆக உள்ளார். 52 முதல் தர போட்டிகளில் 3373 ரன்கள் எடுத்துள்ளார், சராசரி 47.50 ஆகும். இதில் 10 சதங்கள் மற்றும் 14 அரைச்சதங்கள் உள்ளன. கடந்த ரஞ்சி டிராபி சீசனில் 8 போட்டிகளில் 674 ரன்கள் எடுத்து, இரண்டாவது அதிக ரன் குவித்த விக்கெட் கீப்பராக உள்ளார். ஜெகதீசன் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். மேலும் இந்தியா ஏ அணியுடன் விளையாடியுள்ளார். இதனால் 5வது டெஸ்ட்க்கு தேர்வுக்குழு அவரை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விசா பெற்றதும் இங்கிலாந்து செல்வார் என்று கூறப்படுகிறது.
இந்திய அணி இங்கிலாந்து தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. 4வது டெஸ்ட் ட்ராவில் முடிந்தால், ஓவல் போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும். ஒருவேலை 4வது டெஸ்டில் தோல்வி அடைந்தால் இங்கிலாந்து இந்த தொடரை வெல்லும். கேப்டன் ஷுப்மன் கில் தலைமையிலான அணி, இந்த சவால்களை எதிர்கொள்ள தயாராக உள்ளது. ஜெகதீசன் போன்ற இளம் வீரர்களின் வருகை, அணிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும்.
மேலும் படிங்க: ஆர்சிபி வீரர் மீது POCSO வழக்கு.. கிரிக்கெட் வீராங்கனையை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை!