Ind vs Eng: இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட அண்டர்சன் – டெண்டுல்கர் தொடரை விளையாடி வருகிறது. இதுவரை மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி மூன்றில் 2 வெற்றிகளை பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணி 4வது மற்றும் 5வது டெஸ்ட் போட்டியை வென்றால் தான் தொடரை கைப்பற்ற முடியும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
ஆனால் தற்போது மான்செஸ்டரில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து அணிக்கு சாதகமாக சென்றுக்கொண்டிருக்கிறது. இதனால், இந்திய அணி இப்போட்டியை டிராவாவது செய்ய வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்திய அணி இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியின் சார்பாக அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்களையும் ஜெய்ஸ்வால் 58 ரன்களையும் ரிஷப் பண்ட் 54 ரன்களையும் அடித்தனர்.
பும்ரா தடுமாற்றம்
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 669 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணி சார்பாக அதிகபட்சமாக ஜோ ரூட் 150 ரன்களையும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 141 ரன்களையும் குவித்தனர். தற்போது இங்கிலாந்து அணி 311 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இச்சூழலில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இந்த நிலையில், இந்த போட்டியின்போது இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரையில் பார்த்திடாத தடுமாற்றத்தை சந்தித்து இருக்கிறார்.
மோசமான சாதனை
அதாவது, ஜஸ்பிரித் பும்ரா கடந்த 2018ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமானார். அப்போதில் இருந்து விளையாடிய 47 டெஸ்ட் போட்டிகளில் எந்த ஒரு இன்னிங்ஸிலும் அவர் 100 ரன்களை விட்டுக்கொடுத்தது இல்லை. ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான இந்த போட்டியில் அவர் 33 ஓவர்களை வீசிய நிலையில், அவர் 112 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். இதன் மூலம் அவர் தனது டெஸ்ட் கரியரில் முதல் முறையாக ஒரு இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்து ஒரு பெரிய தடுமாற்றத்தை சந்தித்துள்ளார்.
மேலும், ஜஸ்பிரித் பும்ரா இந்த போட்டியில் 33 ஓவர்களை வீசியதன் மூலம் இரண்டாவது முறையாக ஒரு இன்னிங்ஸில் அதிக ஓவர்களை வீசி உள்ளார். முன்னதாக அவர் 2021ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் 36 ஓவர்களை வீசி இருந்தார். அப்போது கூட அவர் 84 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து பும்ரா ஓய்வு பெறுகிறாரா? அதிர்ச்சி தகவல்!
மேலும் படிங்க: ரிஷப் பந்த் இடத்தை நிரப்ப வரும் முன்னாள் சிஎஸ்கே வீரர்! யார் தெரியுமா?