டெல் அவிவ்,
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேல் மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 59 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர்.
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கியது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், அடுத்தடுத்து பலர் கொலை செய்யப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார்.
ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் என்பவரை இஸ்ரேல் தாக்கி படுகொலை செய்தது. ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை பெய்ரூட் நகரில் வைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி தாக்குதல் நடத்தி கொன்றது.
ஹிஸ்புல்லா அமைப்பின் தடுப்பு காவல் பிரிவின் தளபதி மற்றும் அவர்களுடைய செயற்குழுவின் உறுப்பினரான நபில் குவாவக் என்பவரையும் இஸ்ரேல் ராணுவம் தாக்கி அழித்தது.
இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் இன்று வெளியிட்ட செய்தியில், பிந்த் பெயில் பிரிவை சேர்ந்த, அலி அபித் அல்-காதிர் இஸ்மாயில் என்ற மூத்த ஹிஸ்புல்லா தளபதி படுகொலை செய்யப்பட்டு விட்டார். தெற்கு லெபனானில் பயங்கரவாத அமைப்பை புனரமைப்பு செய்யும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார் என தெரிவித்து உள்ளது. இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக உள்ள எதனையும் நீக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடும் என்றும் தெரிவித்து உள்ளது.