மீண்டும் மோதும் இந்தியா – பாகிஸ்தான்! இந்த முறை 2 போட்டி நடைபெற வாய்ப்பு!

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஆசிய கோப்பை 2025 தொடர் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த தொடர் நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டி20 வடிவில் நடைபெறும் இந்த தொடர், செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரின் முக்கிய அம்சமாக, பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே பிரிவில் (குரூப் ஏ) இடம்பெற்றுள்ளன. இந்த இரண்டு அணிகளும் கடைசியாக சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாடி இருந்தனர். இரு அணிகளும் மோதும் போட்டி செப்டம்பர் 14-ஆம் தேதி நடைபெற உள்ளது.

மேலும் படிங்க: டெஸ்ட்டில் முதன்முறையாக.. பும்ரா செய்த மோசமான சாதனை.. முழு விவரம்!

இந்தியாவிற்கு இந்த தொடரை நடத்தும் உரிமம் இருந்தபோதிலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான அரசியல் பதட்டங்கள் காரணமாக, போட்டிகள் யுஏஇ-க்கு மாற்றப்பட்டுள்ளன. முன்னதாக, பயங்கரவாத தாக்குதல் காரணமாக இந்த தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் நிலவியது, ஆனால் தற்போது அனைத்து தடைகளும் நீங்கி தொடர் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த முறை ஆசிய கோப்பையில் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. இது தொடரை மேலும் விறுவிறுப்பாக்கி உள்ளது. மொத்தம் உள்ள 8 அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

குரூப் ஏ: இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), ஓமன்.
குரூப் பி: இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் ஃபோர்’ சுற்றுக்கு முன்னேறும். இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், இந்த ஆசிய கோப்பை தொடரில் 2 முறை மோதுவதற்கான வாய்ப்பும் உருவாகியுள்ளது. தொடரின் இறுதிப்போட்டி செப்டம்பர் 28 அன்று நடைபெறும். அனைத்து போட்டிகளும் துபாய் மற்றும் அபுதாபி மைதானங்களில் நடத்தப்பட உள்ளது.

ஆசிய கோப்பை

பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்த தொடரில் இந்தியா பங்கேற்குமா என்பது குறித்து கேள்விகள் இருந்து கொண்டே இருந்தது. இருப்பினும், ஜூலை 24 அன்று டாக்காவில் நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) கூட்டத்தில் இந்த தொடரை நடத்துவது என உறுதி செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா காணொலி மூலம் பங்கேற்றார். இதை தொடர்ந்து, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் மொஹ்சின் நக்வி, தொடருக்கான தேதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது 2026-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு ஒரு சிறந்த பயிற்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வணிக முக்கியத்துவம்

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு இருப்பதால், இது ஒளிபரப்பு மற்றும் விளம்பரதாரர்களுக்கு மிகப்பெரிய வருவாயை ஈட்டித் தரும். சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா, இந்த தொடரின் தொலைக்காட்சி உரிமையை எட்டு ஆண்டுகளுக்கு $170 மில்லியனுக்கு வாங்கியுள்ளது. அரசியல் பதட்டங்களுக்கு மத்தியிலும், கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த தொடர் பெரும் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் ஒவ்வொரு அணிகளும் எந்த எந்த வீரர்கள் 2026 டி20 உலக கோப்பை அணிக்கு சரியாக இருப்பார்கள் என்பதை உறுதி செய்யவும் இந்த தொடர் உதவும்.

மேலும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து பும்ரா ஓய்வு பெறுகிறாரா? அதிர்ச்சி தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.