India vs England 5th Test: இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று (ஜூலை 31) தொடங்கியது. இங்கிலாந்து அணி தற்போது 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வரும் சூழலில், இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தக்கவைக்க இயலும்.
இந்நிலையில், இன்று தொடங்கிய 5வது போட்டியிலும் இந்திய அணி கேப்டன் சுப்மான் கில் (Shubman Gill) டாஸை தோற்றார். இந்த தொடர் முழுவதும் அவர் டாஸை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஒல்லி போப் பந்துவீச்சை தேர்வு செய்தனர். ஆடுகளம் முதல் நாளான இன்று புற்களுடன் பச்சையாக தென்பட்டது. இரு அணிகளும் தலா 4 மாற்றங்களை செய்துள்ளன.
India vs England 5th Test: இரு அணிகளின் மாற்றங்கள்
இங்கிலாந்து அணியை (Team England) பொருத்தவரை பென் ஸ்டோக்ஸ், லியம் டாவ்சன், ஜோப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ் ஆகியோர் நீக்கப்பட்டு ஜேக்கப் பெத்தல், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன், ஜாஸ் டங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில் ரிஷப் பண்ட், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், அன்ஷுல் கம்போஜ் ஆகியோருக்கு பதில் துருவ் ஜூரேல், கருண் நாயர், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
India vs England 5th Test: குறுக்கிட்ட மழை
இந்திய அணி (Team India) முதலில் பேட்டிங் செய்த நிலையில், தற்போது 29 ஓவர்கள் முடிவில் 85 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்திருக்கிறது. மழை காரணமாக முன்கூட்டியே தேநீர் இடைவேளை அறிவிக்கப்பட்ட நிலையில், சாய் சுதர்சன் 28 ரன்களுடனும், கருண் நாயர் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். ஜெய்ஸ்வால் 2, கேஎல் ராகுல் 14, சுப்மான் கில் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். முதலில் 23 ஓவர்களில் 72 ரன்களுடன் 2 விக்கெட்டுகளை இந்தியா இழந்திருந்தபோது, மழை குறுக்கிட்டது. அப்போதும் முன்கூட்டியே மதிய உணவு இடைவேளை விடப்பட்டது.
தொடர்ந்து நீண்ட நேரம் மழை காரணமாகவும், மைதானத்தில் மழைநீர் தேங்கியதன் காரணமாகவும் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. ஆறு ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் 29வது ஓவரில் மழை மீண்டும் குறுக்கிட ஆட்டம் தடைப்பட்டது. இதனால் முன்கூட்டியே தேநீர் இடைவேளையும் அறிவிக்கப்பட்டது. மூன்றாவது செஷன் இன்னும் தொடங்கவில்லை. போட்டி தொடங்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
India vs England: இந்திய அணியின் 2 பெரிய தவறுகள்
இந்நிலையில், நடப்பு தொடரில் இந்திய அணி பிளேயிங் லெவன் காம்பினேஷனில் இந்திய அணி செய்த இரண்டு தவறுகளை இங்கு காணலாம்.
குல்தீப் யாதவ்
இவரை குறைந்தபட்சம் 2-3 போட்டிகளிலாவது இந்திய அணி விளையாடியிருக்க வேண்டும். இவரது பந்துவீச்சு, இங்கிலாந்தின் அதிரடி பேட்டிங் அணுகுமுறைக்கு எந்தச் சூழலிலும் பிரச்னை தரக்கூடியதுதான். இதுகுறித்து சௌரவ் கங்குலி ஊடகம் ஒன்றில் பேசுகையில், “மான்செஸ்டர், லார்ட்ஸ் மற்றும் (இந்தியா வெற்றி பெற்றிருந்தால்) பர்மிங்காமில் கூட குல்தீப் யாதவ் விளையாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
தரமான சுழற்பந்துவீச்சு இல்லாமல், டெஸ்டின் ஐந்தாவது நாளில் விக்கெட்டுகளை வீழ்த்துவது உங்களுக்கு கடினமாக இருக்கும். கொஞ்சம் கரடுமுரடான மற்றும் சிறிது திருப்பம் இருந்த ஒரு ஆடுகளத்தில், ஒரு தரமான சுழற்பந்து வீச்சாளர் கூட இல்லை” என தனது கருத்தை பதிவு செய்திருந்தார். இது சரியானதும் கூட… ஒருவேளை குல்தீப் விளையாடியிருந்தால் தற்போது தொடர் இந்தியாவின் பக்கம் இருந்திருக்கலாம்.
அர்ஷ்தீப் சிங்
இவரையும் பலரும் 5வது போட்டி வரை எதிர்பார்த்தனர். ஆனால் அவருக்கும் இந்த சுற்றுப்பயணத்தில் வாய்ப்பு கொடுக்கவே இல்லை, கம்பீர் – கில் ஜோடி (Gambhir Gill). அவரை தயாராக இருக்கும்படி கூறியிருப்பதாக கில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் சொல்லியிருந்தார்.
ஆனால், கடைசியில் பிரசித் கிருஷ்ணாவை நம்பி, அர்ஷ்தீப் சிங்கிற்கு கில் வாய்ப்பளிக்கவில்லை. பும்ரா விளையாடாதபோது ஒரு X Factor வீரராக அர்ஷ்தீப் சிங்கை இந்திய அணி விளையாடியிருக்க வேண்டும். 2வது போட்டியில் ஆகாஷ் தீப் வந்தபோது, பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலே அர்ஷ்தீப் சிங்கை இந்திய அணி விளையாடியிருக்கலாம், அதுவும் செய்யவில்லை. அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பளிக்கப்படாததும் நிச்சயம் இந்திய அணியின் பெரிய தவறு எனலாம். அதாவது, ஒருவேளை இந்தியா இந்த தொடரை இழக்க நேரிட்டால் அதற்கு இந்த 2 தவறுகளும் பெரியளவில் பங்கு வகிக்கும் எனலாம்.
மேலும் படிக்க | இங்கிலாந்துக்கு சாதகமாக செயல்பட்ட அம்பயர்.. விதிமுறையை மீறினாரா?
மேலும் படிக்க | இந்திய அணியில் இந்த வீரர் விளையாட மாட்டார்… சுத்தி வளைத்து சொன்ன சுப்மான் கில் – யார் அவர்?
மேலும் படிக்க | ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் இல்லை… இங்கிலாந்தின் பிளேயிங் 11 அறிவிப்பு – 4 மாற்றங்கள் என்னென்ன?