மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டாக்காரர் சேவாக். ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த வீரர்களில் ஒருவர். இந்திய கிரிக்கெட் கண்ட தலைசிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் இவருக்கு தனி இடம் உண்டு. கடந்த 2011 ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். சேவாக் ஆட்டத்தின் முதல் பந்திலிருந்தே அடித்து ஆடும் திறன் கொண்டவர்.
அப்படிப்பட்ட அவர் கடந்த 2008-ம் ஆண்டே ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விடலாம் என்று நினைத்ததாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். ஆனால் சச்சின் தெண்டுல்கர்தான் அறிவுரை கூறி தனது கெரியரை காப்பாற்றி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், “ஆஸ்திரேலியாவில் 2007-08ல் நடைபெற்ற காமன்வெல்த் தொடரில், நான் முதல் மூன்று (ஐந்து) போட்டிகளில் விளையாடினேன். பின்னர் எம்.எஸ். தோனி என்னை அணியிலிருந்து நீக்கினார். அதன் பிறகு சிறிது காலம் நான் தேர்வு செய்யப்படவில்லை. பிளேயிங் லெவனில் எப்போது வாய்ப்பு கிடைக்கவில்லையோ அப்போதே இனி ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று ஓய்வு பெற முடிவு செய்தேன்.
பின்னர் நான் சச்சின் தெண்டுல்கரிடம் சென்று, ‘நான் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி யோசித்து வருகிறேன்’ என்று சொன்னேன். அவர் என்னிடம், ‘இல்லை, 1999-2000 ஆம் ஆண்டுகளில் இதேபோன்ற ஒரு கட்டத்தை நான் கடந்து வந்தேன், அப்போது நான் கிரிக்கெட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அந்த மோசமான காலகட்டம் கடந்து போனது. எனவே, நீங்கள் ஒரு கடினமான கட்டத்தை கடந்து செல்கிறீர்கள், ஆனால் அது கடந்து போகும். நீங்கள் உணர்ச்சிவசப்படும்போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். உங்களுக்கு சிறிது நேரம் கொடுத்து 1-2 தொடர்களில் பாருங்கள் பின்னர் ஒரு முடிவை எடுங்கள்’ என்று சொன்னார்.
அதன் பிறகு நான் அடுத்த தொடரில் விளையாடி நிறைய ரன்கள் எடுத்தேன். நான் 2011 உலகக்கோப்பையில் விளையாடினேன், நாங்கள் உலகக்கோப்பையையும் வென்றோம்” என்று கூறினார்.
இறுதியில் சேவாக் கடந்த 2015-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.