கெய்ன்ஸ்,
மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் 17 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவும், 2-வது ஆட்டத்தில் 53 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இந்த நிலையில் இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டி கெய்ன்ஸ் நகரில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 2.45 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சொந்த மண்ணில் தொடரை இழக்க கூடாது என ஆஸ்திரேலிய அணி எல்லா வழியிலும் முயற்சிக்கும். மறுபுறம் தொடரை வெல்ல தென் ஆப்பிரிக்க அணி வரிந்து கட்டும். இதனால் களத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.