துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்?.. ‘இந்தியா’ கூட்டணியில் இழுபறி.. இன்று மீண்டும் ஆலோசனை

புதுடெல்லி,

இந்திய துணை ஜனாதிபதியாக இருந்தவர், ஜெகதீப் தன்கர். நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக கடந்த 2022-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், கடந்த மாதம் 21-ந் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு பதவி விலகுவதாக ஜனாதிபதிக்கு அவர் கடிதம் அனுப்பினார். அவரது ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்முவும் ஏற்றுக்கொண்டார்.

இன்னும் 2 ஆண்டுகள் பதவிக்காலம் இருந்த நிலையில் திடீரென ஜெகதீப் தன்கர் பதவி விலகியது மத்திய அரசு வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தன்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான ஆயத்தப்பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கியது.

அதன்படி, புதிய துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9-ந் தேதி நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. நாடாளுமன்றத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும், அதைத்தொடர்ந்து உடனே வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் துணை ஜனாதிபதி பதவிக்கு ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக களம் காண்கிறார். எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி சார்பில் போட்டி வேட்பாளர் நிறுத்தக்கூடும் என பேசப்படுகிறது.

இதுபற்றி முடிவு எடுப்பதற்காக இந்தியா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்கள். கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகளின் பல்வேறு தலைவர்கள் இதில் கலந்துகொண்டு விவாதித்தனர். கூட்டம் இரவு 8 மணிக்கு மேலும் நீடித்தது. தலைவர்களுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் இதுதொடர்பான கூட்டத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் மதியம் 12:30 மணிக்கு வைத்துக்கொள்ளலாம் என முடிவு எடுக்கப்பட்டது. இதனை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. டெரிக் ஓ பிரையன் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சிலரது பெயர்கள் அடிபடுகின்றன. குறிப்பாக திருச்சி சிவா, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோரது பெயர்கள் பேசப்படுகிறது. போட்டியிட்டால் அரசியல் பிரமுகர்களை தவிர்த்து பிற நபர்களை நிறுத்த வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.