2025 ஆசிய கோப்பை தொடர் வரும் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. துபாயில் நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தா, வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஓமன், யுஏஇ, ஹாங்காங் உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன. அடுத்த ஆண்டு 2026 டி20 உலகக் கோப்பை நடைபெற இருப்பதால், இத்தொடர் டி20 வடிவில் நடைபெறுகிறது. உலகக் கோப்பைக்கு இத்தொடரை ஒரு பயிற்சியாக ஆசிய அணிகள் மேற்கொள்ள இருக்கிறது.
இத்தொடருக்கான அணியை முதமுதலில் பாகிஸ்தான் அறிவித்தது. இந்த நிலையில், இன்று மதியம் பிசிசிஐ ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாக இருக்க, துணை கேப்டனாக சுப்மன் கில்லை அறிவித்திருக்கின்றனர். இந்த சூழலில் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்கள் இந்த அணியில் தேர்வாகவில்லை. குறிப்பாக ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வாகாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியை தலைமை தாங்கி கோப்பையை வென்று தந்த அவர், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை தலைமை தாங்கி இறுதி போட்டியை வரை அழைத்து வந்தார். அப்படி இருக்கையில், அவரை அணியில் எடுக்காதது அனைவரிடமும் கேள்வியை எழுப்பி உள்ளது. இந்த நிலையில், அணியை தேர்வை அறிவித்தபோது பேசிய தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், ஷ்ரேயாஸ் ஐயரை எடுக்காதது ஏன் என விளக்கம் அளித்துள்ளார்.
“ஷ்ரேயாஸ் ஐயரை பொறுத்தவரையில், அவர் யாருக்கு மாற்று வீரராக அணியில் இடம் பெற முடியும். இது அவருடைய தவறும் இல்லை. எங்களுடைய தவறும் இல்லை” என அஜித் அகர்கர் கூறினார். அதாவது, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா போன்றோர் உள்ளதால், ஷ்ரேயாஸ் ஐயருக்கான இடம் அணியில் இல்லை என அஜித் அகர்கர் விளக்குகிறார். இதேபோல், ஜெய்ஸ்வாலை குறித்து பேசும்போது, “மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அபிஷேக் சர்மா சிறப்பாக செயல்படுகிறார். அவரால் பந்து வீசவும் முடியும். இருவரில் ஒருவரைதான் எடுக்க முடியும் என்பதால் ஜெய்ஸ்வாலை எடுக்காமல், அபிஷேக்கை எடுத்தோம்” என கூறினார்.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி: சூர்ய குமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் ரானா, ரிங்கு சிங். ரிசர்வ் வீரர்கள்: பிரசித் கிருஷ்ணா, வாசிங்டன் சுந்தர், துருவ் ஜுரேல், ரியான் பராக், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
About the Author
R Balaji