அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆசிய கோப்பை 2025 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் தலைமையில், சுப்மன் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் மொத்தம் 15 பேர் இடம் பெற்றுள்ளனர். அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் அணியின் பலம் வாய்ந்த வீரர்களாக உள்ளனர். இருப்பினும், இந்த அணி தேர்வு கிரிக்கெட் வட்டாரங்களில் ஒரு புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. சிறப்பாக விளையாடிய சில வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதும், சில வீரர்களின் தேர்வும் தான் இந்த சர்ச்சைக்கு முக்கியக் காரணம்.
தற்போதைய ஃபார்ம் மற்றும் திறனைவிட சிலருக்கு விருப்பமான வீரர்கள் அணியில் இடம் பெற்று இருப்பது சரி இல்லை என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஃபார்மில் உள்ள பல திறமையான வீரர்கள் அணியில் இடம்பெறாத நிலையில், சில வீரர்களின் தேர்வு குறித்து தீவிரமான கேள்விகள் எழுந்துள்ளன. அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.
ஹர்ஷித் ராணா
டெல்லியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணாவின் தேர்வுதான் இந்த விவாதத்தின் மையப்புள்ளியாக உள்ளது. ஹர்ஷித் ராணா ஏற்கனவே மூன்று விதமான கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணிக்காக அறிமுகமாகி, இந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை வென்ற அணியிலும் இடம்பிடித்திருந்தார். அவரது முதல் சர்வதேச டி20 போட்டியிலேயே, மாற்று வீரராக களமிறங்கி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இருப்பினும், ஆசிய கோப்பை போன்ற ஒரு முக்கிய தொடரில் அவரது தேர்வு அவசியம்தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு தாக்குதலை ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் வழிநடத்த உள்ளனர். துபாய் போன்ற ஆடுகளங்களில், இந்திய அணி பெரும்பாலும் சுழற்பந்து வீச்சாளர்களையே பெரிதும் நம்பியிருக்கும். அப்படி இருக்கையில், மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பளிப்பது சரியான முடிவா என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஐபிஎல் தொடரில், அவர் 34 போட்டிகளில் 40 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும், அவரது எக்கானமி ரேட் 9.51 ஆக உள்ளது. சர்வதேச அளவில், அவர் இன்னும் தனது திறமையை முழுமையாக நிரூபிக்கவில்லை. எனவே, அவரது தேர்வு கேள்வியை எழுப்பி உள்ளது.
ரிங்கு சிங்
இந்திய அணியின் ஃபினிஷராக உருவெடுத்த ரிங்கு சிங், இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த அளவு ஜொலிக்கவில்லை. இருப்பினும், அவரது முந்தைய சர்வதேச போட்டிகளின் அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, அவருக்கு ரிசர்வ் வீரராக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஃபார்மில் உள்ள மற்ற மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேன்களை புறக்கணித்துவிட்டு, ரிங்கு சிங்கை தேர்ந்தெடுத்தது ஏன் என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
சுப்மன் கில் (துணை கேப்டன்)
இந்திய அணியில் திறமையான வீரரான சுப்மன் கில், டி20 போட்டிகளில் தொடர்ந்து நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த திணறி வருகிறார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற அதிரடி தொடக்க வீரரை அணியில் சேர்க்காமல், சுப்மன் கில்லுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவும், தற்போதைய ஃபார்மை விட, வீரரின் பெயருக்கும், கடந்த கால செயல்பாடுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதையே காட்டுகிறது. மொத்தத்தில், இந்த அணித் தேர்வு பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. தேர்வுக்குழுவின் இந்த முடிவுகள், ஆசிய கோப்பையில் இந்திய அணிக்கு சாதகமாக அமையுமா அல்லது பாதகமாக முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
About the Author
RK Spark