சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் தமிழகம் முழுவதும் நடத்திவரும் போராட்டம் நேற்றும் நடைபெற்றது. போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் கடந்த 18-ம் தேதி முதல் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.
காத்திருப்புப் போராட்டம், சாலை மறியல், ஆர்ப்பாட்டம் என பல்வேறு வகைகளில் போராடுபவர்களை காவல் துறை கைதுசெய்து வருகிறது. அந்த வகையில் நேற்றும் போராட்டம் நீடித்தது. சென்னையில் தாம்பரம், வடபழனி உள்ளிட்ட 7 பணி மனைகளில் தொழிலாளர்களின் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
இதில் சிஐடியு போக்குவரத்து சங்கத்தை சார்ந்த ஆறுமுகநயினார், தயானந்தம், துரை, பாலாஜி, சசிகுமார் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்கள் கூறும்போது, “போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலனை தீபாவளிக்கு முன்பாக அளிக்க வலியுறுத்துகிறோம்.
அல்லது எப்போது வழங்கப்படும் என்பதற்கான உத்தரவாதத்தையாவது அளிக்க வேண்டும். எங்களின் கோரிக்கையை நிறைவேறாவிட்டால் தீபாவளி வரை தொடர் போராட்டம் நடத்தப்படும்” என்றனர்.