நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் டி.ராஜேந்தர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார்.
1983-ல் அவர் இயக்கி நடித்திருந்த ‘உயிருள்ளவரை உஷா’ திரைப்படம் வெளியாகியிருந்தது. அந்தப் படத்தை இப்போது ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்.

தன்னுடைய அனைத்துப் படங்களையும் ஒவ்வொன்றாக ரீ-ரிலீஸ் செய்ய டி.ஆர். டாக்கீஸ் என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். ‘உயிருள்ளவரை உஷா’ படத்தில் ரஜினி நடிப்பதாக இருந்தது பற்றி டி.ஆர். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கிறார்.
ரஜினி குறித்து பேசிய டி.ஆர்., “ரஜினி மாதிரி ஒரு பண்பான மனிதரைப் பார்க்கவே முடியாது. ‘ஒரு தலை ராகம்’ படத்திலிருந்தே நானும் ரஜினியும் நல்ல நண்பர்கள்.
என்னுடைய ‘ரயில் பயணங்களில்’ படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் சார் என்னைப் பாராட்டினார். அதைப் போல, ரஜினியும் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு என்னைப் பாராட்டினார்.
பிறகு, இந்தக் காம்பினேஷனில், என்னுடைய வசனத்தில் ஒரு படம் செய்யலாம் என ரஜினி சொன்னார்.

அதைத் தொடர்ந்து, ‘என்னுடைய தேதிகள் இப்போது இல்லை. நான் உங்களுக்கு கெஸ்ட் ரோல் செய்து தருகிறேன்’ என்றார்.
நானும் இந்தக் கதையைத் தயார் செய்துவிட்டு அவரை டப்பிங் ஸ்டுடியோவில் சந்தித்தேன். கதை அவருக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. கதையைக் கேட்டு முடித்ததும் என்னைக் கட்டிப்பிடித்தார்.
‘இந்தப் படத்தை நிச்சயமாகச் செய்யலாம்’ என்றார். அதன் பிறகு அதில் வேறொரு விஷயம்தான் தடையாக வந்தது. ‘பெரிய தயாரிப்பு நிறுவனத்தை வைத்துப் படத்தைத் தயாரிக்கலாம்’ என்றார்.
அப்போது என்னுடைய படத்தை நானே சொந்தமாக ரிலீஸ் செய்ததால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டிருந்தது. எந்தப் பெரிய நிறுவனத்திற்குச் சென்றாலும் எனக்கும் அதே சம்பளம்தான் கிடைக்கும்.
ஆனால், இப்போது அந்தச் சம்பளம் போதாது. நஷ்டத்தை ஈடு செய்ய நானே படத்தைத் தயாரிக்க வேண்டும் என்றேன். அதற்கு அவர், ‘நீங்களும் நானும் பெஸ்ட் ப்ரண்ட்ஸ், நம்முடைய நட்பு இதனால் முறிந்துவிடக் கூடாது.
நான் பெரிய நிறுவனத்தில் மட்டும்தான் படம் நடிக்க வேண்டும் என்று இருக்கிறேன். என்ன செய்யலாம்? நீங்களே சொல்லுங்கள்’ என்றார்.

எனக்காக அவருடைய கொள்கைகளை மாற்றிக்கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் அப்போது அது நடக்கவில்லை.
‘உயிருள்ளவரை உஷா’ படத்தின் செயின் ஜெயபால் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தால் அது வேறு மாதிரியானதாக இருந்திருக்கும். பிறகு, நான் சில மாற்றங்களைச் செய்து நடித்தேன். இதுதான் உண்மை.” என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…