பிரதமர் மோடிக்கு எதிராக பேசிய ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும்: அமித் ஷா வலியுறுத்தல்

குவஹாத்தி: பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரை அவதூறாகப் பேசிய விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக ராகுல் காந்தி அம்மாநிலத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பிஹாரின் தர்பங்கா நகரில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பேசிவிட்டு சென்ற பின்னர் அந்த மேடையில் பேசிய முகம்மது ரிஸ்வி, மோடியின் தாயார் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, தர்பங்கா மாவட்ட பாஜக தலைவர் ஆதித்ய நாராயண் சவுத்ரி கொடுத்த புகாரின் பேரில் முகம்மது ரிஸ்வி கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், குவஹாத்தியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா, “ஊடுருவல்காரர்களுக்கான பாதுகாப்பு யாத்திரையை ராகுல் காந்தி பிஹாரில் நடத்தி வருகிறார். அந்த யாத்திரையின்போது பிரதமர் மோடிக்கு எதிராகவும், மறைந்த அவரது தாயாருக்கு எதிராகவும் பேசப்பட்ட வார்த்தைகள், ராகுல் காந்தி தொடங்கிய கீழ்த்தரமான எதிர்மறை அரசியலின் விளைவாகும்.

தனது குழந்தைகளை கடின உழைப்பால் வளர்த்த ஒரு தாயை அவமதிப்பதன் மூலம் ராகுல் காந்தியின் கட்சி அனைத்து வரம்புகளையும் தாண்டிவிட்டது. அரசியலில் இதை விட பெரிய வீழ்ச்சி என்ன இருக்க முடியும்? இதற்காக பொதுமக்கள் ஒருபோதும் காங்கிரஸை மன்னிக்க மாட்டார்கள். ராகுல் காந்திக்கு வெட்கம், மானம் என்று ஏதேனும் இருந்தால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரையும் அவரது கட்சியையும் நாட்டு மக்கள் வெறுப்புடன் பார்த்து வருகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

குவஹாத்தியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உள்ளாட்சி பிரதிநிதிகளின் மாநாட்டில் உரையாற்றிய அமித் ஷா, “உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பை முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்தபோது டெல்லியில் உள்ள நிபுணர்கள், அசாம் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து யோசித்துக் கொண்டிருந்தனர். காங்கிரஸ் தலைவர்களும் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.

ஆனால், முடிவுகள் வந்தபோது, ​​காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக அழிக்கப்பட்டது. உண்மையில், அசாமின் உள்ளாட்சித் தேர்தல்களில், தொலைநோக்கி கொண்டு தேடினாலும் காங்கிரஸ் கட்சியை பார்க்க முடியாது.

மாவட்ட அளவிலான மொத்தமுள்ள 397 இடங்களில் பாஜக 301 இடங்களையும், தாலுகா அளவிலான மொத்தமுள்ள 2,188 இடங்களில் 1,445 இடங்களையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றுள்ளது. பஞ்சாயத்து அளவில் 15 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அசாம் எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் இந்தத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 1980க்குப் பிறகு பஞ்சாயத்துத் தேர்தலில் 74%க்கும் அதிகமாக வாக்குகள் பதிவானது இந்த தேர்தலில்தான்.

மக்களவையிலும், 14 இடங்களில் 11 இடங்களை பாஜக வென்றது, ஐந்து மாநிலங்களவை இடங்களையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றது. 2021 முதல் நடைபெற்ற 11 இடைத்தேர்தல்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.