Yo-Yo டெஸ்டில் விராட் கோலி தான் ஜித்து… அவரையே மிஞ்சிய இந்த 4 வீரர்கள்!

India National Cricket Team: இந்திய கிரிக்கெட்டில் ஒரு காலகட்டம் வரை வீரர்களின் ஃபிட்னஸ் என்பது பெரியளவில் கவனம் பெறாது. முன்னணி வீரர்கள் பலரும் உடற்தகுதியின்றியும் பல ஆண்டுகள் நீடித்து வருவதை கடந்த தலைமுறை கிரிக்கெட் ரசிகர்கள் பார்த்திருப்பார்கள். 

Add Zee News as a Preferred Source

Team India: இந்திய அணியில் Yo-Yo Test

பேட்டிங்கில் கில்லியாக இருப்பார்கள், ஆனால் பீல்டிங்கில் கடுமையாக சொதப்புவார்கள். பேட்டிங்கில் 40 ரன்களை அடிக்கிறார்கள் என்றால் அதில் 10-15 ரன்களை பீல்டிங்கில் கோட்டைவிடுவார்கள். எனவே, தோனி – டங்கன் பிளெட்சர் தலைமையின் கீழ் (2011-2015) இந்திய அணி வீரர்களின் உடற்தகுதிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. உடற்தகுதியில்லாத வீரர்களுக்கு அணியில் இடமில்லை என்ற நிலை உருவான. சில முன்னணி வீரர்களும் இதனால் கடும் அதிருப்திக்கு உள்ளானதாக கூறப்பட்டது.

இதற்கு அடுத்தகட்டமாக 2015ஆம் ஆண்டில் விராட் கோலியின் கைகளுக்கு இந்திய அணி மெல்ல மெல்ல மாறத்தொடங்கியது. 2014ஆம் ஆண்டு முடிவில் டெஸ்ட் கேப்டன்ஸியை விராட் கோலியிடம் ஒப்படைத்தார், தோனி. 2017ஆம் ஆண்டில்தான் மூன்று பார்மட்டிலும் கோலி கேப்டன்ஸிஷிப்பை பெற்றார்.

Team India Yo-Yo Test: விராட் கோலி முதலிடம்

அப்படியிருக்க, 2015இல் இந்திய அணியின் Strength and Conditioning பயிற்சியாளராக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பாசு சங்கரின் கீழ்தான் வீரர்களின் உடற்தகுதி அடுத்த கட்டத்தை நோக்கிச் சென்றது. அதன் ஒரு பகுதியாக, இந்திய அணிக்குள் Yo-Yo டெஸ்ட் கொண்டுவரப்பட்டது. இந்த டெஸ்டில் வீரர்கள் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே அணி தேர்வுக்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்ற நிலை ஏற்பட்டது. விராட் கோலி – பாசு சங்கர் காலகட்டத்தில் இந்த டெஸ்ட் உச்சம் பெற்றது. 

அந்த வகையில், தற்போது பிசிசிஐ உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளை விளையாடும் வீரர்களுக்கு உடற்தகுதி பரிசோதனையை மேற்கொண்டு வருகிறது. Yo-Yo டெஸ்ட் போன்று Brocho டெஸ்ட் தற்போது இந்திய அணியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வீரர்களிடையே எடுக்கப்பட்ட Yo-Yo பரிசோதனையில் விராட் கோலிதான் அதிக புள்ளிகளை பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. Yo-Yo டெஸ்டில் விராட் கோலி 18.7 புள்ளிகளை பெற்றிருக்கிறார். அவரை அடுத்து சுப்மான் கில் 18.0, ஜஸ்பிரித் பும்ரா 17.8, முகமது சிராஜ் 17.6, ரோஹித் சர்மா 17.2 புள்ளிகளை பெற்றிருக்கின்றனர். 16.3 புள்ளிகளை எடுத்தால் இந்த டெஸ்டில் தேர்ச்சி பெறலாம்.

Team India Yo-Yo Test: விராட் கோலியை மிஞ்சிய 4 வீரர்கள்

விராட் கோலியே பெரும்பாலான நேரங்களில் இந்திய அணியின் ஃபிட்டான வீரராக வலம் வருகிறார். விராட் கோலி Yo-Yo டெஸ்டில் அதிகபட்சமாக 19 புள்ளிகளை நிறைவு செய்திருக்கிறார். ஆனால் விராட் கோலியை விடவும் இந்த 4 வீரர்கள் Yo-Yo டெஸ்டில் அதிக புள்ளிகளை பெற்றிருக்கிறார்கள். அவர்கள் யார் யார் என்று தெரிந்தால் நீங்களே அதிர்ச்சியடைவீர்கள். அவர்கள் குறித்து இங்கு காணலாம். 

4. மனீஷ் பாண்டே: இவர் 2007ஆம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலியின் தலைமையில் கீழ் விளையாடியிருந்தார். இவரும் உடற்தகுதிக்கு பெயர் பெற்ற வீரர் எனலாம். இவர் கோலியை விட 0.2 புள்ளிகள் அதிகமாக, அதாவது 19.02 புள்ளிகளை ஒருமுறை Yo-Yo டெஸ்டில் பதிவு செய்தார். இருப்பினும் இவர் சர்வதேச அளவில் பெரியளவில் சோபித்ததில்லை. 

3. மயங்க் தாகர்: டெல்லி கிரிக்கெட் வீரரான இவர் பெரும்பாலானோருக்கு பரிட்சயம் இல்லாதவர் எனலாம். இவர் கோலி, மனீஷ் பாண்டேவையும் தாண்டி ஒரு முறை 19.3 புள்ளிகளை Yo-Yo டெஸ்டில் பதிவு செய்திருக்கிறார். இடதுகை சுழற்பந்துவீச்சாளரான இவர் ஐபிஎல் தொடரில் 2023 சீசன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலும், 2024ஆம் ஆண்டில் ஆர்சிபியில் விளையாடியிருந்தார். 

2. அகமது பந்தே: ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் வீரரான இவர் 2018ஆம் ஆண்டில் Yo-Yo டெஸ்டில் 19.4 புள்ளிகளை பெற்றார். இவரது சாதனை சுமார் ஐந்து ஆண்டுகள் நீடித்தது. 

1. மயங்க் அகர்வால்: இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய ஓபனராக இருந்த இவர் கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த Yo-Yo டெஸ்டில் 21.1 புள்ளிகை பெற்றார். இதுதான் இன்று வரையிலும் யாராலும் எட்ட முடியாத சாதனையாக உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.