இந்தூர்,
மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் மாநிலத்தில் மிக பெரிய மருத்துவமனைகளில் ஒன்றாக அறியப்படும் மகராஜா யஷ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில், சமீபத்தில், புதிதாக பிறந்த 2 குழந்தைகள் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன. ஐ.சி.யு.வில் வைக்கப்பட்டு இருந்த அந்த 2 குழந்தைகளை எலிகள் கடித்து விட்டன என குற்றச்சாட்டு எழுந்தது.
இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளிவந்து வைரலானது. இதனால் பெரும் சர்ச்சை வெடித்தது. இதுபற்றி அந்த மருத்துவமனையின் சூப்பிரெண்டான டாக்டர் அசோக் யாதவ் கூறும்போது, தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள குழந்தை ஒன்றின் விரல்களையும், மற்றொரு குழந்தையின் தலை மற்றும் தோள் பகுதியையும் எலிகள் கடித்து உள்ளன.
அவை இரண்டும் பிறந்து சில நாட்களேயான குழந்தைகள் ஆகும். அவற்றில் ஒரு குழந்தை கார்கோன் மாவட்டத்தில் யாருமற்ற நிலையில் கைவிடப்பட்டு கிடந்துள்ளது. அதனை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்றார். இந்த சம்பவங்கள் பற்றி விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்புடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டும் உள்ளது என கூறினார்.
இந்தநிலையில், மத்திய பிரதேசம் மருத்துவமனையில் எலி கடித்த 2 குழந்தைகளில் ஒரு குழந்தை நேற்று முன்தினமும் மற்றொரு குழந்தை நேற்றும் பலியானது. இதுபற்றி மருத்துவர் அசோக் யாதவ் கூறும்போது, முதல் குழந்தை உயிரிழப்புக்கு எலி கடித்தது காரணம் இல்லை. 1.2 கிலோ எடை கொண்ட, பிறந்து 3 நாளே ஆன அந்த பெண் குழந்தை கடுமையான இருதய பாதிப்புடன் இருந்தது.
அதனுடைய பெற்றோர் அதனை கைவிட்டு விட்டு சென்றுள்ளனர். போலீசாரிடம் இந்த தகவலை தெரிவித்து விட்டோம் என்றார். 2-வது குழந்தை உயிரிழந்தது பற்றி அந்த மருத்துவமனையின் துணை சூப்பிரெண்டு டாக்டர் ஜிதேந்திரா வர்மா செய்தியாளர்களிடம் கூறும்போது, செப்டிசீமியா எனப்படும் ரத்தத்தில் பாக்டீரியா கலந்து அதனால், குழந்தை உயிரிழந்து உள்ளது.
அந்த பெண் குழந்தை 1.6 கிலோ எடையுடன் இருந்தது. பல்வேறு உடல் பாதிப்புகளை கொண்டிருந்தது. 7 நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை நடந்து குழந்தை பிறந்ததும், அதன் நிலைமை மோசமடைந்தது. அதன் இடது கையின் இரண்டு விரல்களை எலிகள் கடித்துள்ளன. இதனால், லேசான சிராய்ப்புகள் ஏற்பட்டன என கூறினார்.
மத்திய பிரதேசத்தில் அரசு மருத்துவமனை ஐ.சி.யு.வில் சிகிச்சை பெற்று வந்தபோது, எலி கடித்த 2 குழந்தைகளும் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தில், பணியாளர்கள் 2 பேர் சஸ்பெண்டு உள்பட 6 பேர் மீது மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பல்வேறு அதிகாரிகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், இந்த விசயத்தில், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், இந்தூர் மாவட்ட கலெக்டர் ஆஷிஷ் சிங்கிற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து, அதுபற்றி எடுத்த நடவடிக்கை தொடர்பான அறிக்கையை 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.
ஆஷிஷ் சிங் நேற்றிரவு மருத்துவமனையை ஆய்வு செய்த பின்னர் கூறும்போது, 3-ம் தரப்பினரை வைத்து மருத்துவமனை தணிக்கை செய்யப்படும். அதன் முடிவுகளின் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.