ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடர் நாளை (செப்டம்பர் 09) தொடங்கி செப்டம்பர் 27ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இத்தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஓமன், ஹாங்காங், யுஏஇ உள்ளிட்ட 8 நாடுகள் பங்கேற்கின்றன.
Add Zee News as a Preferred Source
ஆசிய கண்டத்தின் சிறந்த 8 அணிகள் மோதுவதால், இத்தொடர் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை எகிறச்செய்திருக்கிறது. அதே சமயம் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நீண்ட மாதங்களுக்கு பின்னர் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளது இத்தொடர். இப்போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், ஆசிய கோப்பை தொடரில், அதிக ரன்கள், அதிக விக்கெட்களை வீழ்த்தப்போகும் வீரர் யார் என்பதை முன்னாள் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கணித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், ஆசிய கோப்பை தொடர் 2025ல் இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் அதிக ரன்களை குவிப்பார். பந்து வீச்சில் வருண் சக்கரவர்த்தி அதிக விக்கெட்களை வீழ்த்துவார். அதேபோல் இந்திய அணிதான் ஆசிய கோப்பை தொடரை வென்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்றும் தினேஷ் கார்த்திக் கணித்திருக்கிறார். மேலும், இந்த தொடரில் ஜிதேஷ் சர்மா கவனிக்கப்பட வேண்டிய வீரராக இருப்பார் என்றும் அவர் கூறி இருக்கின்றார்.
நல்ல ஃபார்மில் இருக்கும் கில்
சுப்மன் கில் கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் இலங்கை அணிக்கு எதிரான சர்வதேச டி20 போட்டியில் விளையாடினார். அதன்பிறகு தற்போதுதான் அவர் சர்வதேச டி210 போட்டியில் விளையாட இருக்கிறார். இடற்கிடையில் 2025 ஐபிஎல் தொடரில் அவர் 650 ரன்களை 155 ஸ்டிரைக் ரேட்டுடன் குவித்தார். அதுமட்டுமல்லாமல், சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் 754 ரன்களை குவித்து நல்ல ஒரு ஃபார்மில் உள்ளார். அதேபோல் வருண் சக்கரவர்த்தி இதுவரை 12 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 31 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ரின்கு சிங், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.
About the Author
R Balaji