காத்மாண்டு,
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம். இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள அழகிய மலைப்பிரதேசமான நேபாளம் தற்போது ஸ்தம்பித்து போயுள்ளது. ஜென் இசட் தலைமுறையினர் முன்னெடுத்த போராட்டத்தால் அந்த நாடு ஒட்டுமொத்தமாக திக்கி திணறியுள்ளது. இந்த போராட்டத்திற்கான காரணம் குறித்தும், போராட்டக்காரர்கள் சொல்வது பற்றியும் இங்கே பார்க்கலாம்.
நேபாளத்தில் பிரதமராக கே.பி. ஷர்மா ஒலி உள்ளார். இவரது அரசு அண்மையில் புதிய சட்டம் ஒன்றை அமல்படுத்தியது. அதாவது, சமூக வலைதள நிறுவனங்கள் தினசரி நடவடிக்கைகளை கண்காணிக்க, நேபாள நாட்டை சேர்ந்த நபர் ஒருவரை நிறுவனம் நியமிக்க வேண்டும். நியமிக்கப்பட்ட நபர், வாராவாரம் நாட்டிற்கு எதிராக சமூக வலைதளத்தில் நடக்கும் விவாதங்களை கவனித்து தங்களுக்கு வழங்குவார்கள் என்று அரசு கூறியிருந்தது. இதற்காக 7 நாட்கள் அவகாசமும் சமூக வலைதள நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த விதிமுறைகளை வாட்ஸ்அப், யூடியூப், எக்ஸ் உள்ளிட்ட 26 சமூக வலைதள நிறுவனங்கள் பின்பற்றவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து 26 சமூக வலைதள நிறுவனங்களுக்கும் நேபாள அரசு தடை விதித்தது. ஒட்டுமொத்தமாக திடீரென சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், நேபாள இளைஞர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தில் நேபாளத்தின் பிரபலங்களும் ஆதரவு தெரிவித்ததால் அந்த நாடே ஸ்தம்பித்தது. தலைநகர் காத்மாண்டு மற்றும் முக்கிய பகுதிகளான பொக்காரா, புட்வால், தாரன், கோரகி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் திரண்டனர்.
இதையடுத்து போராட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கையும் மீறி போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் அருகே உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைந்தனர். இதனால் நிலைமை கையை மீறிப் போனது. உடனடியாக கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போலீசார் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க முயற்சித்தனர். மேலும், தண்ணீரை பீச்சி அடித்தனர். போராட்டக்காரர்கள் பதிலுக்கு மரங்களின் கிளைகளை உடைத்து போராட்டக்காரர்கள் தூக்கி எறிந்தனர். அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
சில போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள்ளும் நுழைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 20 பேர் பலியாகினர். 350 -க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் சீருடையில் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். அதேபோல, கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேபாளம் முழுக்க போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. பொக்காராவில் முதல்-மந்திரி அலுவலகம் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
சமூக பேஸ்புக், வாட்ஸ்-ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்களை தடை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேபாளத்தில் அரசுக்கு எதிராக புரட்சி வெடித்துள்ள நிலையில், அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்தநிலையில், காத்மாண்டு போராட்டங்களில் வன்முறை மூண்ட நிலையில் நேபாள உள்துறை மந்திரி ரமேஷ் லேகாக் ராஜினாமா செய்துள்ளார். சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை திரும்ப பெறப்படலாம் என்று சொல்லப்படுகிறது. ஊழலை மறைக்க, கருத்து சுதந்திரத்தை ஒடுக்க அரசு முயற்சிப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.