ஹில்டன் காத்மாண்டு: தீக்கிரையான ரூ.800 கோடி கனவு; நேபாளத்தின் உயரமான ஹோட்டல் பற்றி தெரியுமா?

நேபாளம் நாட்டில் இளைஞர்கள் கலவரத்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். அரசியல்வாதிகள் தாக்கப்பட்டுள்ளனர். முன்னாள் பிரதமரின் மனைவி கொல்லப்பட்டுள்ளார். அத்துடன் பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட அரசு நிறுவன கட்டடங்கள், அரசியல்வாதிகளின் இல்லங்கள், ஊடக, கட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல கோடி மதிப்புள்ள கட்டடங்களை தீக்கிரையாக்கியுள்ளனர். வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை சேதப்படுத்தியிருக்கின்றனர்.

அந்த வகையில் நேபாளத்தின் மிக உயரமான ஹோட்டல்களில் ஒன்றான ஹில்டன் காத்மாண்டு, எரித்து சாம்பலாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியிருக்கிறது.

ஹில்டன் காத்மாண்டு

அமெரிக்க நிறுவனமான ஹில்டன் ஹோட்டல்ஸ்-க்கு, உலகின் பெரும்பாலான நாடுகளில் கிளைகள் உள்ளன. சுற்றுலாத்துறை பொருளாதாரத்தில் கணிசமான பங்கு வகிக்கும் நேபாளத்தின் விருந்தோம்பலை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் நோக்கில் 2016ம் ஆண்டு இந்த கட்டடத்தை உருவாக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

கோவிட் பெருந்தொற்று காலத்தில் பள்ளத்தாக்கில் பணிகளை மேற்கொள்வது நிறுத்தப்பட்டது முதல் பல தடைகளை எதிர்கொண்டு, சுமார் 800 கோடி முதலீட்டில் 2024 ஜூலை மாதம் இந்த ஹோட்டல் திறக்கப்பட்டது.

நக்சல் ஆதிக்கம் உள்ள பகுதியின் அருகேயே இருந்தாலும், இதில் பல கேட்டகிரிகளில் 176 ரூம்கள் மற்றும் பல வசதிகள் உள்ளன. 64 மீட்டர் உயரத்துடன் நேபாளத்தின் மிகப் பெரிய ஹோட்டலாக இது இருந்தது.

ஹில்டன் காத்மாண்டு

வணிக ரீதியாக மட்டுமல்லாமல் கலாசார ரீதியாகவும் முக்கியத்துவம் பெரும் வகையில் உருவாக்கப்படது ஹில்டன், காத்மாண்டு. இதன் நீளமான முகப்பு கண்ணாடிகள் புத்த வழிபாட்டு கொடியின் வடிவத்தில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதன் ஒரு பகுதி, காத்மாண்டுவின் பரபரப்பான தெருக்களில் நெருக்கமாகவும், மறுபகுதி லாங்டாங் மலையை நோக்கி விரிவடைந்தும் உள்ளது. நேபாளத்தில் அடிக்கடி நில அதிர்வு ஏற்படும் என்பதைக் கருத்தில்கொண்டு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் முன்னேற்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ளது இந்த ஹோட்டல்.

இப்போதைய நிலை

ஹில்டனின் பளபளக்கும் கண்ணாடிகள் நெருப்பின் வெப்பத்தில் உருகியுள்ளன. சுவர்கள் முழுவதும் கருகி, உள்பக்கத்தில் அழகிய வேலைப்பாடுகளும், மதிப்புமிக்க பொருட்களும் பஸ்பமாகியிருக்கிறது.

ஆடம்பரமான அனுபவத்தை வழங்கிவந்த இடம், கெட்ட கனவுபோல கடந்த கலவரத்தின் எச்சமாக கருகி நிற்கிறது.

நேபாளத்தின் மிக உயரமான ஹோட்டல் உடைந்து நொருங்கிவிடுவதுபோல சாம்பல் உருவமாக உள்ளது. பல வருட முதலீடு, வடிவமைப்பு, உழைப்பு மற்றும் கலாசார நோக்கம் எல்லாமும் சிலமணிநேர கோபத்தில் சாம்பலாகியிருக்கிறது.

நேபாளத்தில் புதிய அரசு பொறுப்பேற்கவுள்ள சூழலில், நிலைமை கட்டுக்குள் உள்ளதாக ராணுவம் அறிவித்திருக்கிறது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பொருட்சேதத்தை சரிசெய்வது புதிய அரசாங்கத்தின் முதல் பொறுப்பாக உள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.