மும்பை,
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவராக ரோஜர் பின்னி கடந்த இரண்டு ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு சமீபத்தில் 70 வயது பூர்த்தியடைந்தது. பிசிசிஐ விதிகளின்படி, 70 வயதைக் கடந்தவர்கள் நிர்வாகப் பதவிகளில் நீடிக்க முடியாது என்பதால், அவர் தனது பதவியிலிருந்து விலகினார்.
தொடர்ந்து, துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தற்காலிக பிசிசிஐ தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். புதிய தலைவரை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டி வருகிறது.
இதனிடையே பி.சி.சி.ஐ.-ன் புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 94-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் வருகிற 28-ந் தேதி நடைபெற உள்ளது. அதில் சச்சின் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் செய்திகள் தெரிவித்தன.
இந்நிலையில் பி.சி.சி.ஐ. தலைவராக தாம் பொறுப்பேற்க போவதில்லை என்று சச்சின் தெரிவித்துள்ளார். அத்துடன் ஊடகங்களில் காணப்படும் செய்திகள் அனைத்தும் வதந்தியானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சச்சினின் நிர்வாகக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவிக்கு சச்சின் தெண்டுல்கர் பரிசீலிக்கப்படுவது அல்லது பரிந்துரைக்கப்படுவது குறித்து சில அறிக்கைகள் மற்றும் வதந்திகள் பரவி வருவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. அத்தகைய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பதை நாங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.