‘தண்டகாரண்யம்’ படப்பிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கிராமத்தில் உள்ள அஞ்செட்டி என்ற பழங்குடியினர் வாழும் பகுதியில் நடைபெற்றிருக்கிறது.
அந்த ஊருக்குச் செல்ல சரியான பாதைகூட இல்லாமல் இருந்த நிலையில் கிட்டத்தட்ட 8 கிலோமீட்டருக்கு பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் நிறுவனம் சாலை அமைத்துக்கொடுத்திருக்கிறது.
அந்த சாலையை தான் தற்போது அங்குள்ள மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வைரலாகின.

இந்தச் செய்தியைப் பகிர்ந்து “கடலூர் அருகே ‘பொம்மை நாயகி’ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது, ஒரு அரசு ஆரம்பப்பள்ளிக்கு பா.ரஞ்சித்தின் நீலம் புரொடெக்ஷன் மூலம் சுற்றுச்சுவர் கட்டிக்கொடுக்கப்பட்டது” என்று ‘பொம்மை நாயகி’ படத்தின் இயக்குநர் ஷான் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார்.
கடலூர் அருகே #பொம்மைநாயகி திரைப்படம் படப்பிடிப்பின்போது, ஒரு அரசு ஆரம்பப்பள்ளிக்கு @officialneelam @beemji மூலம் சுற்றுச்சுவர் கட்டிக்கொடுக்கப்பட்டது… @NeelamSocial @Neelam_Culture https://t.co/EkImqsINXl
— Shan ✨ (@shan_shanrise) September 16, 2025
மதில் சுவர் கட்டிக்கொடுத்த பா.ரஞ்சித்
இந்நிலையில் இயக்குநர் ஷானைத் தொடர்புக்கொண்டு பேசினோம். இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அவர், ” ‘பொம்மை நாயகி’ படத்திற்காக அரசுப் பள்ளி ஒன்றில் படப்பிடிப்பை நடத்தினோம்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில்தான் அந்தப் பள்ளிக்கூடம் இருக்கிறது. கொரோனா சமயம் என்பதால் அப்போது பள்ளிக்கூடங்கள் இயங்கவில்லை.
ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி அந்தப் பள்ளிக்கூடத்தில் படப்பிடிப்பை நடத்தினோம்.
பொதுவாக மற்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்தினால் அதற்கான தொகையைக் கொடுப்போம்.

இந்தப் பள்ளிக்கூடத்தைப் பொறுத்தவரை மதில் சுவர்கள் எதுவும் இல்லை. இதனை ரஞ்சித் அண்ணாவிடம் சொன்னேன்.
அவர் சரி என்று சொன்னதும் அந்தப் பள்ளிக்கூடத்திற்கு மதில் சுவரைக் கட்டிக்கொடுத்தோம். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மிகவும் சந்தோஷப்பட்டார்.
நீலம் புரொடக்ஷ்ன் சார்பில் மதில் சுவர் மட்டுமின்றி அந்த ஊர் மக்களுக்கு நிறைய புத்தங்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நிறைய உதவிகளும் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த விஷயத்தை அப்போது நாங்கள் விளம்பரப்படுத்தவில்லை.
நிறைய உதவிகள் செய்யும் நீலம் புரொடக்ஷ்ன்
இப்போது ‘தண்டகாரண்யம்’ படப்பிடிப்பின்போது ரஞ்சித் அண்ணாவின் நீலம் புரொடக்ஷ்ன் சார்பில் சாலை அமைத்துக்கொடுக்கப்பட்டிருக்கிறது.
இது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில்தான் ‘பொம்மை நாயகி’ படப்பிடிப்பின்போது பள்ளிக்கூடத்திற்கு மதில் சுவர் கட்டிக்கொடுத்ததை நான் பகிர்ந்திருந்தேன்.
ரஞ்சித் அண்ணாவின் நீலம் புரொடக்ஷ்ன் சார்பில் நிறைய உதவிகள் செய்யப்படுகின்றன. ஆனால் அதை அவர்கள் வெளியில் சொல்வதில்லை.

ரஞ்சித் அண்ணாவுக்கு சமூகம் சார்ந்து ஒரு பொதுவான முத்திரையைக் குத்துவார்கள்.
ஆனால் இப்போது அவர் கட்டிக்கொடுத்திருக்கும் மதில் சுவர் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கானது மட்டும் அல்ல, அது எல்லோருக்குமானது தான்.
நீலம் புரொடக்ஷன் என்றால் இதுதான் என்ற ஒரு பிம்பம் இருக்கிறது, ஆனால் அது அப்படி கிடையாது.
இப்போது அவர்கள் அமைத்துக்கொடுத்திருக்கக்கூடிய சாலையும் அப்படிதான். அந்தச் சாலையை பழங்குடியினர் மட்டும் பயன்படுத்த மாட்டார்கள். அது எல்லோருக்குமான சாலை தான்.
பா.ரஞ்சித் எல்லோருக்குமானவர்தான்…
பா.ரஞ்சித் என்ற பெயரைக் கேட்டவுடன் வேறு மாதிரியான ஒரு முத்திரை குத்தப்படுகிறது. இந்த மாதிரி உதாரணங்களைச் சொல்லும்போது மக்களுக்கு ஒரு புரிதல் வர வேண்டும்.
அவர் சினிமா தாண்டி சமூகம் சார்ந்த பார்வையை வைக்கும்போது அது ஒரு பொதுவான பார்வையாகத்தான் இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு உரிமைக்குரலாகத்தான் இருக்கிறார்.

ஆனால் மக்களுக்கு ஒரு பயன்பாடு என்று வந்துவிட்டால் அவரும், நீலம் புரொடக்ஷனும் எல்லோருக்காக்காவும் தான் இருக்கிறார்கள்.
நீலம் புரொடக்ஷனில் படம் பண்ணும்போது நாங்களும் பொது சமூகத்திற்கான ஒரு படத்தைத்தான் எடுப்போம்.
அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் எல்லாம் ஒரு ஒரு சமூகத்திற்கான அரசியலையும், ஒட்டுமொத்த சமூகத்திற்கான அரசியலையும்தான் பேசியிருக்கும்” என்று பா.ரஞ்சித் மற்றும் நீலம் புரொடெக்ஷன் செய்த உதவி குறித்து பகிர்ந்தார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
