ஈஷா கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழா நிறைவு.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய பிரபலங்கள்

கோயம்புத்தூர்

சத்குருவின் ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுத் திருவிழா, நம் நாட்டை விளையாட்டில் வல்லரசாக்கும் நோக்கில் எடுக்கப்படும் மிகப்பெரிய முன்னெடுப்பு என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் பேசினார்.

ஈஷா ஆதியோகி வளாகத்தில் 17 ஆவது ஈஷா கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழாவின் இறுதிப்போட்டிகள் நேற்று (21/09/25) மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

சத்குரு முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, பாரா ஒலிம்பிக் வீராங்கனை பவினா படேல் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளையும், பரிசுத்தொகையையும் வழங்கினர்.

17 ஆவது ஈஷா கிராமோத்சவம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மற்றும் முதல் முறையாக ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான கைப்பந்து (வாலிபால்) மற்றும் பெண்களுக்கான எறிபந்து (த்ரோபால்) போட்டிகள் நடத்தப்பட்டன.

ஆறு மாநிலங்களுக்கு இடையேயான இறுதிப்போட்டி ஆதியோகியில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான வாலிபால் இறுதிப் போட்டியில் சேலத்தை சேர்ந்த உத்தமசோழபுரம் அணி முதல் பரிசை வென்றது. கர்நாடகாவை சேர்ந்த ஹெகதிஹள்ளி அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

பெண்களுக்கான இறுதிப் போட்டியில் கர்நாடகாவை சேர்ந்த படகணுரூ கிராம அணி முதல் பரிசை வென்றது. கோவையை சேர்ந்த தேவராயபுரம் அணி இரண்டாம் இடத்தை பிடித்தது. பாரா வாலிபால் போட்டியில் கிருஷ்ணகிரி அணி முதல் இடத்தையும், கன்னியாகுமரி அணி இரண்டாம் இடத்தையும் வென்றது.

வாலிபால் மற்றும் த்ரோபால் போட்டிகளில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகளுக்கு முறையே ₹5,00,000, ₹3,00,000, ₹1,00,000, ₹50,000 பரிசுத்தொகையாக வழங்கப்பட்டன. மொத்த பரிசுத்தொகையாக ₹67 லட்சம் வழங்கப்பட்டது.

இவ்விளையாட்டு போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி தொடங்கி மொத்தம் 183 இடங்களில் நடைபெற்றது. இதில் 35,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5,472 அணிகள் மூலம் 12,000-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 63,000-க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் கலந்து கொண்டனர்.

இவ்விளையாட்டு திருவிழாவின் இறுதிப்போட்டி மற்றும் நிறைவு நாளை முன்னிட்டு ஆதியோகி முன்பு மிகப் பிரம்மாண்டமான முறையில் 2000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட வள்ளி கும்மி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனுடன் காலை முதல் மாலை வரை 6 மாநில கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இத்திருவிழாவில் வண்ண கோலப் போட்டி, சிலம்ப போட்டி, கிராமிய சமையல் போட்டி மற்றும் 20-க்கும் மேற்பட்ட வேடிக்கை விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. வண்ண கோலப்போட்டியில் 1200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் நான்கு இடங்களை வென்றவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் ஒரு புடவை பரிசாக வழங்கப்பட்டது. இதனுடன் 6 மாநில பாரம்பரிய உணவுகளை கொண்ட உணவு அரங்குகளும் இடம்பெற்று இருந்தன.

இந்த விளையாட்டுப் போட்டிகள் தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கானதாக இல்லாமல் விவசாயிகள், தூய்மை பணியாளர்கள், மீனவர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள், இல்லத்தரசிகள் ஆகிய எளிய கிராம மக்களுக்காக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.