உலக அளவில் தற்போது ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தியாவிலும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. சாமானிய மக்கள் கூட அதைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அனைவரிடமுமே ஸ்மார்ட்போன் இருப்பதால் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு மெல்ல மெல்ல மக்களிடையே அதிகரித்து வருகிறது. ஏஐ-யால் எந்த அளவு நன்மை இருக்கிறதோ அதே அளவுக்கு தீமையும் உள்ளது.
அதாவது, ஏஐ காரணமாக பெரிய அளவிலான வேலை இழப்பு ஏற்படும் அச்சமும் உள்ளது. பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இதற்கு செயற்கை நுண்ணறிவு காரணம் இல்லை என்று நிறுவனங்கள் கூறினாலும் மறைமுகமாக செயற்கை நுண்ணறிவே இதற்கு முதன்மையான காரணமாக இருக்கிறது.
இந்த நிலையில், ஐநா நடத்திய ஆய்வில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தாக்கம் காரணமாக உலகளவில் பணியாற்றும் ஆண்களில் 21% பேரின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் எனத் தெரியவந்துள்ளது. பெண்களில் 28% பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படக்கூடும் என்றும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இது பெண்களின் பொருளாதார சுதந்திரம் மற்றும் சமூகத்தில் அவர்களின் பங்கு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனப்படுகிறது.