Ind vs Ban: "இந்தியாவை வீழ்த்தும் திறன் எல்லா அணிகளுக்கும் இருக்கிறது"- வங்காளதேச பயிற்சியாளர் பளீச்

இந்தாண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 வடிவில் நடைபெற்று வருகிறது.

ஏ, பி என இரண்டு குழுக்களாக 8 அணிகள் இத்தொடரில் பங்கேற்றன. லீக் சுற்று முடிவில் இரு குழுக்களில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருந்த இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின.

இந்தச் சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.

ஆனால், சூப்பர் 4 சுற்றில் தலா மூன்று போட்டிகளில் ஆடும் இந்த நான்கு அணிகள் குறைந்தபட்சம் 2 போட்டியில் வென்றால்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும்.

Asia Cup - ஆசிய கோப்பை
Asia Cup – ஆசிய கோப்பை

இச்சுற்றின் முதல் போட்டியில் வங்காளதேசத்திடம் தோற்ற இலங்கையும், இரண்டாவது போட்டியில் இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தானும் இன்று (செப்டம்பர் 23) மோதுகின்றன.

இப்போட்டியில் தோற்கும் அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழக்கும், வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பில் நீடிக்கும்.

மறுமுனையில், வங்காளதேச அணியும், இந்திய அணியும் நாளை (செப்டம்பர் 24) மோதவிருக்கின்றன.

இதில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டியில் தனது இடத்தைக் கிட்டத்தட்ட உறுதி செய்துவிடும்.

இந்த நிலையில், வங்காளதேச அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் (முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர்), இந்தியாவை வீழ்த்தக்கூடிய திறன் எல்லா அணிகளுக்கும் இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

இன்றைய பத்திரிகையாளர்கள் சந்திப்பில், இந்தியாவை வீழ்த்த முடியுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பில் சிம்மன்ஸ், “அனைத்து அணிகளுக்கும் இந்தியாவை வெல்லும் திறன் உள்ளது.

போட்டி என்பது இதற்கு முன்பு இந்தியா என்ன செய்திருக்கிறது என்பதல்ல, போட்டி நடக்கின்ற மூன்றரை மணிநேரத்தில் என்ன நடக்கிறது என்பதுதான்.

எங்களால் முடிந்தவரை சிறப்பாக விளையாட முயற்சிப்போம். இந்திய அணியில் உள்ள ஓட்டைகளைக் கண்டறிவோம் என நம்புகிறோம்.

வங்காளதேச கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ்
பில் சிம்மன்ஸ்

இந்தியா தற்போது உலகில் நம்பர் ஒன் டி20 அணி என்பதால் அவர்களுடன் மோதும் போட்டி பரபரப்பாக இருக்கும். அந்த பரப்பரப்பில் நாங்கள் சவாரி செய்வோம்.

40 ஓவர்களில் பிட்ச்சில் பெரிய வித்தியாசத்தை நான் பார்க்கவில்லை. பேட்டிங்குக்கு பிட்ச் சாதகமாக இருக்கிறது. பவுலர்கள் சரியாகப் பந்து வீசவேண்டும்.

மேலும், டாஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.