வெல்லிங்டன்,
நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மைக் ஹெசன் கடந்த 2018 ஆம் ஆண்டுடன் ஓய்வு பெற்றார். அதன்பின்னர், நியூசிலாந்து அணியின் அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான பயிற்சியாளராக கேரி ஸ்டெட் செயல்பட்டு வந்தார். அவர் கடந்த ஏப்ரல் மாதம் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
53 வயதான கேரி ஸ்டெட் தலைமையிலான நியூசிலாந்து அணி, ஐ.சி.சி 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டி, டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி மற்றும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி என பல்வேறு உயரங்களை எட்டியது. மேலும், இவரது தலைமையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் தொடரிலேயே கோப்பையை வென்று அசத்தியது.
இந்த நிலையில், தனது விலகல் முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக கேரி ஸ்டெட் இணைந்துள்ளதாக நியூசிலாந்து அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.அவர் நியூசிலாந்து அணியின் உயர் செயல்திறன் பயிற்சியாளராக செயல்படுவார் என கூறப்பட்டுள்ளது.
உயர் செயல்திறன் பயிற்சியாளராக கேரி பணியாற்றினாலும், அவர் 2025-26 ரஞ்சி டிராபி சீசனுக்கான ஆந்திர அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் செயல்படுவார். அவர் பயிற்சியாளராக நியமிக்கப்படுவதை இது தடுக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரி ஸ்டெட் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய பின்னர், ஜூன் மாதம் அவருக்குப் பதிலாக தென்னாப்பிரிக்காவின் ராப் வால்டர் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவர் 2028 ஆம் ஆண்டில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பை வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.