ரிங்கு சிங்கின் வாழ்க்கையை மாற்றிய 'அந்த ஒரு நாள்' – காதல் திருமணத்திற்கு அதுதான் காரணமாம்!

Crucial Moment In Rinku Singh Life: ஐபிஎல் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. கடந்த 17 வருடங்களில் மட்டும் ஐபிஎல் தொடரால் இந்திய அணிக்கு பல பொக்கிஷமான வீரர்கள் கிடைத்திருக்கிறார்கள். அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா என சொல்ல ஆரம்பத்தால் லிஸ்ட் பெரிதாக போகும். இந்த லிஸ்டில் சில கருத்து வேறுபாடுகளும் பலருக்கும் இருக்கலாம்.

Add Zee News as a Preferred Source

Rinku Singh: ஐபிஎல் கண்டெடுத்த முத்து, ரிங்கு சிங்

ஆனால், ஐபிஎல் கண்டெடுத்த முத்துகளில் தவிர்க்கவே முடியாதவர் என்றால் அது ரிங்கு சிங்தான். இந்திய அணி டி20ஐ அணியில் மட்டுமே அவருக்கு தற்போதைக்கு இடமிருக்கிறது, அதிலும் பிளேயிங் லெவன் ஸ்பாட் உறுதியாகவில்லை. 27 வயதான ரிங்கு சிங் கடந்த 2024 டி20 உலகக் கோப்பையில் தேர்வாகாதது பலருக்கும் பெரும் வருத்தமளித்தது. வரும் டி20 உலகக் கோப்பையில் அவர் விளையாடுவாரா மாட்டாரா என்பதும் உறுதியாகவில்லை.

Rinku Singh: அந்த 5 சிக்ஸர்கள்

ரிங்கு சிங் அனைவருக்கும் தெரியவந்ததற்கு முக்கிய காரணம், 2023 ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக யாஷ் தயாள் வீசிய கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை அடித்து பறக்கவிட்டதுதான். அதுதான் அவர் மீது பலரின் கவனத்தையும் கவர்ந்தது. அந்த வகையில், இந்த 5 சிக்ஸர்கள் அடித்த சம்பவம் எப்படி தனது காதல் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது என அவர் விவரித்துள்ளார். 

ரிங்கு சிங்கிற்கு அடுத்தாண்டு, மக்களவை உறுப்பினரான பிரியா சராஜ் என்பவருடன் திருமணம் நடைபெற உள்ளது. ஏற்கெனவே கடந்த ஜூன் மாதத்தில் லக்னோவில் நிச்சயதார்த்தம் நிறைவடைந்தவிட்ட நிலையில், சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் தனது காதல் வாழ்க்கை குறித்து பேசியிருந்தார். அதில் தான் அந்த 5 சிக்ஸர் அடித்த சம்பவம் தனது வாழ்க்கையை எப்படி மாற்றியது என்பதை தெரிவித்திருந்தார்.

Rinku Singh: காதலுக்கு உதவிய சிக்ஸர்கள்

ரிங்கு சிங் கூறுகையில், “அன்று அவள் (ப்ரியா) தொலைபேசியில் அழுது கொண்டிருந்தாள். சாச்சி தீதி (நிதிஷ் ராணாவின் மனைவி) அவள் அதிகம் உணர்ச்சிவசப்பட்டுள்ளதாக என்னிடம் கூறினார். அது எனக்கு மிகப்பெரிய நாள். ஐந்து சிக்ஸர்கள் தொடர்ச்சியாக அடித்திருந்தேன், மக்கள் என்னை அடையாளம் காணத் தொடங்கினர். 

அதனால், இனி வாழ்க்கையில் மற்ற விஷயங்கள் எளிதாகிவிடும் என்று நான் நினைத்தேன். திருமணம் மற்றும் அனைத்தும் எளிதாகிவிடும் என நினைத்தேன். அந்த நேரத்தில் அவளுடைய தந்தைக்கு ரிங்கு சிங் என்றால் யார் என்றே தெரியாது. அவருக்கு எதுவும் தெரியாது. அவருக்கு கிரிக்கெட்டில் பெரிய ஆர்வம் இருந்ததில்லை. ஆம், அதனால் அவருக்கு அந்த அளவுக்கு என்னை தெரியவில்லை” என்றார். தனக்கு புகழ் கூடியதால்தான் திருமணத்திற்கு எந்த தடையும் வரவில்லை என ரிங்கு சிங் கூறினார். 5 சிக்ஸர் அடித்த சம்பவம்தான் ரிங்கு சிங்கிற்கு உடனடியான புகழையையும் கவனத்தையும் பெற்று தந்தது.

Rinku Singh: சர்வதேச போட்டியில் ரிங்கு சிங்

ரிங்கு சிங் 34 டி20ஐ போட்டிகளில் விளையாடி 550 ரன்களை குவித்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 161.76 ஆக உள்ளது. 2 ஓடிஐ போட்டிகளில் மட்டும் விளையாடி 55 ரன்களை அடித்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் 51 இன்னிங்ஸில் 1099 ரன்களை குவித்துள்ளார், அதில் ஸ்ட்ரைக் ரேட் 145.17 ஆக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.