ஆசிய கோப்பை தொடரை முடித்த கையோடு இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இத்தொடரை முடித்தவுடன் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு அந்நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளிலும் விளையாட உள்ளது இந்திய அணி. இந்த சூழலில், ஒருநாள் தொடருக்கான இந்திய அணி சனிக்கிழமை (அக்டோபர் 04) அன்று தேர்வுக்குழுவால் அறிவிக்கப்பட்டது.
Add Zee News as a Preferred Source
இதில், இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை அப்பதவியில் இருந்து நீக்கி, சுப்மன் கில்லை புதிய கேப்டனாக நியமித்து அவரது தலைமையில் விளையாட இருக்கும் அணியை அறிவித்தனர். சாம்பியன் டிராபி, டி20 உலகக் கோப்பை போன்ற ஐசிசியின் பெரிய கோப்பையை வென்று கொடுத்த ரோகித்தை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது சரியல்ல என்றும் சிலர் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். மறுபுறம், 2027 உலகக் கோப்பையை நோக்கி பயணிக்கும் வகையில் இந்த முடிவு சரியானது, ரோகித் சர்மா 2027 உலகக் கோப்பையில் விளையாடுவாரா என்பது சந்தேகம்தான் அந்த வகையில் இந்த முடிவு சரியானதே என கூறி வருகின்றனர்.
அந்த வகையில், ரோகித் சர்மாவை கேப்டன் பதவில் இருந்து கழற்றிவிட்டது சரியான முடிவு என்று முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், 2027 உலகக் கோப்பையின்போது ரோகித் சர்மா 41 வயதை நெருங்கி விடுவார். எனவே அவரது வயதையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். கேப்டன் பதவி குறித்து எடுக்கப்பட்ட முடிவுகளில் அனைத்து அடங்கி இருக்கிறது. இந்த முடிவு மோசமான நிலைமைகளுக்கு முன்பே எடுக்கப்பட்டதாக நான் பார்க்கிறேன்.
ஏனென்றால், ஆஸ்திரேலியாவின் சிட்னி போட்டியில் நடந்தது போல் மீண்டும் அப்படி ஒரு சூழ்நிலையை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். ரோகித் சர்மா போன்றவருக்கு அது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே அதனை தவிர்ப்பதற்க்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். ரோகித்தின் ஃபார்ம் குறைந்ததாக தெரியவில்லை. ஆனால் குறைந்த போட்டிகளில் விளையாடுவதால் அவருடைய அணிச்சை குறைந்திருக்கலாம் என தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி
சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), அக்சர் படேல், கேஎல் ராகுல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரல், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
About the Author
R Balaji