சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சுழன்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவது, பின்னர் பல மாதங்கள் பொது வெளியில் இருந்து மறைந்து தனது முழங்கால் காயத்திற்கு சிகிச்சை பெறுவது, பின் தனது உடற்தகுதியை மதிப்பிட்டு, அடுத்த சீசனில் விளையாடுவது குறித்து முடிவெடுப்பது என அவரது பயணம் தொடர்கிறது. ஆனால், இந்த வழக்கமான சுழற்சியை உடைக்கும் ஒரு புகைப்படம், தற்போது வெளியாகி சமூக வலைதளங்களிலும், கிரிக்கெட் உலகில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
Add Zee News as a Preferred Source
THALA MS DHONI IN MI JERSEY LOGO pic.twitter.com/NsgtLqMHLk
— Prakash (@definitelynot05) October 7, 2025
சமூக வலைதளங்களை அதிரவைத்த புகைப்படம்
ஐபிஎல் 2026 தொடரில் தோனி விளையாடுவாரா என்ற கேள்விக்கே இன்னும் தெளிவான பதில் கிடைக்காத நிலையில், சாதாரண கால்பந்து போட்டிக்கு பிறகு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம், ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த புகைப்படத்தில் தல தோனி, சென்னை அணியின் பரம எதிரியான மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சி ஜெர்சியை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் வெளியான சில நிமிடங்களிலேயே, சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி, எண்ணற்ற யூகங்களுக்கு வழிவகுத்தது.
தோனி தனது 18 ஆண்டுகால சென்னை சூப்பர் கிங்ஸ் அத்தியாயத்தை முடித்துக்கொண்டு, மும்பை அணிக்கு செல்லப்போகிறாரா என்ற விவாதம் ஒருபுறம் அனல் பறக்க, மறுபுறம் ஆத்திரமடைந்த சிஎஸ்கே ரசிகர்கள், “தலையை தந்தால், ஹிட்மேனை தாருங்கள்” என ரோகித் சர்மாவை டிரேடு செய்யுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களிடையே பெரும் வார்த்தை போரை உருவாக்கியுள்ளது.
தோனியின் மழுப்பலான பதில்
கடந்த ஐபிஎல் 2025 சீசனின் கடைசி லீக் போட்டிக்குப் பிறகு, அடுத்த ஆண்டு சிஎஸ்கே ஜெர்சியில் உங்களை காண முடியுமா என்று தோனியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “அது பல விஷயங்களை பொறுத்தது. நான் முன்பே சொன்னது தான், முடிவெடுக்க எனக்கு நான்கு முதல் ஐந்து மாதங்கள் அவகாசம் உள்ளது. அவசரப்பட தேவையில்லை,” என்று பதிலளித்தார். சென்னை அணி 16 சீசன் வரலாற்றில் முதல்முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து, பிளேஆஃப் பந்தயத்தில் இருந்து வெளியேறிய முதல் அணியாக ஆனது. 14 போட்டிகளில் வெறும் 4-ல் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த மோசமான செயல்பாட்டிற்கு பிறகு தோனி அளித்த இந்த பதில், அவரது எதிர்காலம் குறித்த சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது.
உடற்தகுதியும், அணியின் தேவையும்
ஓய்வு குறித்து மேலும் பேசிய தோனி, “ஒவ்வொரு ஆண்டும் உடலை நிலையை சரியாக வைத்திருக்க 15% அதிக முயற்சி தேவைப்படுகிறது. இது ஒரு தொழில்முறை கிரிக்கெட், நீங்கள் உங்கள் சிறந்த நிலையில் இருக்க வேண்டும். வீரர்களின் செயல்திறனை மட்டும் வைத்து ஓய்வு முடிவை எடுத்தால், பலர் 22 வயதிலேயே ஓய்வு பெற்றுவிடுவார்கள். உங்களுக்கு எவ்வளவு பசி இருக்கிறது, உங்கள் உடற்தகுதி எப்படி உள்ளது, அணிக்கு உங்களால் எவ்வளவு பங்களிக்க முடியும், அணிக்கு உங்கள் தேவை இருக்கிறதா என்பது தான் முக்கியம். எனவே, எனக்கு போதுமான நேரம் இருக்கிறது. ராஞ்சிக்கு திரும்பி சென்று, பைக் ஓட்டி மகிழ்ந்து, சில மாதங்களுக்கு பிறகு ஒரு முடிவை எடுப்பேன். நான் முடித்துவிட்டேன் என்றும் சொல்லவில்லை, மீண்டும் வருகிறேன் என்றும் சொல்லவில்லை. என்னிடம் நேரமெனும் ஆடம்பரம் உள்ளது, அதை ஏன் சிந்தித்து பயன்படுத்தக் கூடாது?” என்றும் அவர் கூறியிருந்தார்.
வெறும் சாதாரண புகைப்படமா அல்லது புதிய தொடக்கமா?
தோனி மும்பை ஜெர்சியை அணிந்திருப்பது ஒரு சாதாரண நிகழ்வாக இருக்கலாம். நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடும்போது ஜெர்சிகளை மாற்றிக்கொள்வது இயல்பு தான். ஆனால், ‘தல’ என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு வீரர், பரம எதிரியான மும்பை அணியின் ஜெர்சியில் காட்சியளிப்பது, மஞ்சள் படை ரசிகர்களால் ஜீரணிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது. தோனியின் மௌனமும், சிஎஸ்கே அணியின் மோசமான கடந்த சீசனும், இந்த புகைப்படம் கிளப்பிய புயலை மேலும் வலுவடைய செய்துள்ளது. இது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமா அல்லது வெறும் யூகங்களின் உச்சமா என்பது, இன்னும் சில மாதங்களில் தல தோனியின் முடிவில் தான் தெரியவரும். அதுவரை, இந்த விவாதம் கிரிக்கெட் உலகில் ஓயாது என்பது மட்டும் உறுதி.
About the Author
RK Spark