திருநெல்வேலி: “கரூர் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கை அடிப்படையில் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும். இதில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்ய முடியாது, யாரையும் பழிதீர்க்கும் அவசியமும் கிடையாது” என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு கூறியுள்ளார்.
பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவில் கல்லூரி மாணவிகளுக்கான ஹாக்கி விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் விளையாட்டுத் துறையில் புரட்சி ஏற்பட்டுள்ளது. உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள் தமிழகத்தில் இருப்பது பெருமை சேர்க்கிறது. தாமிரபரணி ஆறு சிறப்பாகவே உள்ளது. தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுவதுடன் விவசாயிகளுக்கும் தண்ணீர் கொடுக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டு காலத்தில் நல்ல மழைப் பொழிவும் உள்ளது. நல்ல மழை பொழிவதால் நல்லாட்சியும் நடைபெறு கிறது. தாமிரபரணி ஆற்றில் குடிக்கக் கூடிய பக்குவம் பெற்ற தண்ணீர் வேண்டும் என்றால் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில்தான் தண்ணீர் எடுக்க வேண்டும். அப்படி எல்லாம் செய்ய முடியாது. தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதற்கு பணிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதில் தொய்வில்லாமல் விரைவாக அந்த பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் படிப்புக்கு பாதிப்பு இல்லாத வகையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். வெள்ள நீர் கால்வாய் திட்டத்தில் கல்லிடைக்குறிச்சி பகுதியில் பாலம் ஒன்றை அமைப்பதற்கு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களது கோரிக்கையை நியாயமானது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மூலம் ஆலோசனை நடத்தி மேற்கொண்டு வருகிறோம். மாற்று பாலம் அமைக்க வேண்டும் என்றும் ஏற்கெனவே உள்ள பாலம் தவறான இடத்தில் இருப்பதாக பொதுமக்கள் தரப்பு கோரிக்கை வந்தது.
மாற்றுப் பாலமும் புதியதாக கட்டப்பட்டுள்ளது. பழைய பாலத்தை இடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்ட நிலையில் விவசாய பணிகளுக்கு அப்பகுதியில் செல்ல முடியாத நிலை உள்ளதாக தெரிவித்தார்கள். இதையடுத்து அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர், விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மாற்றுப் பாலம் அமைக்கப்பட்டதை பயன்படுத்து வதற்கு கூடுதல் சாலைகள் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் குறித்து தெரியாமல் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் இன்பதுரை பேசி வருகிறார். அவர் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த போது வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை கிடப்பில் போட்டார்கள். வெள்ள நீர் கால்வாய் திட்டத்தில் இருந்த குளறுபடிகளை நீக்க சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த அவர் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோல் ராதாபுரம் கால்வாய் திட்டம் கிடப்பில் போடப்பட்டதாக தவறான தகவலை தெரிவித்து வருகிறார்.
கரூர் விவகாரத்தில் யாரையும் பழிதீர்க்க முடியாது. பழிதீர்க்க வேண்டிய அவசியமும் கிடையாது. சட்டம் சொல்வதையும் சிறப்பு புலனாய்வு குழு சொல்வதையும் வைத்து வழக்குப் பதிவு செய்ய முடியும். மேலும், ஒரு நபர் ஆணையம் மூலம் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். அவசர கோலத்தில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று அப்பாவு கூறியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸ், எம்.எல்.ஏக்கள் ரூபி மனோகரன், அப்துல் வகாப், மாவட்ட ஆட்சியர் ஆர்.சுகுமார், மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.