திருநெல்வேலி: இருமல் மருந்து நிறுவனத்தின் உரிமையை சட்டப்படி ரத்து செய்து, நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 60-வது ஆண்டு வைர விழா நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மத்தியப் பிரதேச மாநிலம், சிந்து வாரா மாவட்டத்தில் குழந்தைகள் மரணத்துக்கு தொடர்புடையதாகக் கருதப்படும் ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்து குறித்து, மத்திய அரசிடமிருந்து கடந்த அக்.1-ம் தேதி எங்களுக்கு அவசர கடிதம் கிடைத்தது. கடிதம் கிடைத்ததும் அந்த மருந்தின் விற்பனைக்கு தடை விதித்தோம்.
தமிழ்நாடு அரசு மருத்துவப் பணிகள் கழகம் மூலம் அந்த மருந்து கொள்முதல் செய்யப்படவில்லை என்றாலும், தனியார் விற்பனைக்கு உடனடியாக தடை விதிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் உரிமையை சட்டப்படி ரத்து செய்து, நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. இருமல் மருந்தில், டை எத்திலீன் கிளைக்கால் என்ற நச்சு ரசாயனம் ஒரு சதவீதம் கூட இருக்கக் கூடாது. ஆனால், 48 சதவிகிதம் வரை கலந்திருப்பது பெரும் குற்றம். இதற்காக சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுவது சரியல்ல. இந்த ஆண்டு இதுவரை 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, 8 பேர் உயிரிழந்தனர். உயிரிழப்புகள் பெரும்பாலும், டெங்குவுடன் சேர்ந்து இதர இணை நோய்கள் இருப்பதாலேயே நிகழ்கின்றன. கடந்த 2012 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் ஆண்டுக்கு 65-க்கும் மேற்பட்ட இறப்புகள் நிகழ்ந்தன. ஆனால், இப்போது எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், கடந்த 5 ஆண்டுகளாக இறப்புகளும், பாதிப்புகளும் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன.
தென்காசி, மயிலாடுதுறை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பிரதமரிடமும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடமும் நேரடியாகக் கோரிக்கை வைத்துள்ளோம். பரிசீலிப்பதாகக் கூறியுள்ளனர். மத்திய அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு வசதியில்லை என்பது போன்ற தகவல்கள் சரியல்ல. புற்று நோய் கண்டறியும் ‘பெட்-சிடி’ கருவி உட்பட பல நவீன உபகரணங்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளன. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவர்களை நியமித்து, அந்த வசதியும் மிக விரைவில் இங்கு நடைமுறைப்படுத்தப்படும். இந்த மருத்துவக் கல்லூரியில் மட்டும் தற்போது ரூ.80 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இருமல் மருந்து விவகாரம்: பின்னணி என்ன? – முன்னதாக, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் தனியார் மருந்து உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்டதால் வெளிமாநிலக் குழந்தைகள் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் கேட்டு வாயிலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆலை பூட்டப்பட்டிருந்ததால் ஆலைக் கதவில் ஒட்டப்பட்டது.
இந்த ஆலையில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் இருமல் மருந்தை உட்கொண்ட ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த பல குழந்தைகளுக்கு அடுத்தடுத்து உடல் நலக் குறைவு ஏற்பட்டதோடு, 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். குழந்தைகளின் உயிரிழப்புகளுக்கு இந்த இருமல் மருந்து தான் காரணம் என்று ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, தங்கள் மாநிலங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தீவிர நடவடிக்கை எடுக்கக் கோரி சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தமிழக அரசை வலியுறுத்தின.
இந்த புகாரின் அடிப்படையில், கடந்த 3-ம் தேதி, ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களின் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் மருந்து உற்பத்தி ஆலைக்கு வந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆலை வளாகம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், மருந்து தயாரிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள்கள், தயாரிக்கப்பட்ட மருந்தின் மாதிரிகளைப் பறிமுதல் செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக, இந்த முக்கிய விவகாரம் குறித்து ஆலை நிர்வாகத்திடம் விளக்கம் கோர, காஞ்சிபுரம் மண்டல மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி மணிமேகலை நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் இந்த ஆலைக்குச் சென்றபோது ஆலை பூட்டப்படிருந்ததால், இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் கோரும் நோட்டீஸை ஆலையின் வாயிலில் ஒட்டினார்.
தயாரிக்கப்பட்ட மருந்தில் ஏதேனும் தரக் குறைபாடு (Sub-standard quality) இருந்ததா அல்லது மருந்து தயாரிப்பு விதிமுறைகள் மீறப்பட்டதா என்பது தொடர்பாகவும், மருந்து தயாரிப்பின்போது பின்பற்றப்பட்ட தரக் கட்டுப்பாடு நடைமுறைகள், மூலப்பொருள்கள் கொள்முதல் ஆவணங்கள், சோதனை அறிக்கைகள் உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய ஆவணங்களையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் குறித்துக் கேட்கப்பட்ட விளக்கத்தை திருப்திகரமாக அளிக்கத் தவறினால், மருந்து மற்றும் அழகு சாதனப் பொருள் சட்டம் மற்றும் விதிகளின்படி, ஆலையின் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.