வானிலை முன்னறிவிப்பு: காஞ்சி, கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் காஞ்சிபுரம், கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (அக்.9), நாளை மறுதினம் (அக்.10), வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுசன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

அக்.11 முதல் அக்.14-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் நாளை (அக்.9) கோவை மாவட்ட மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும், நாளை மறுநாள் (அக்.10) நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப் பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்.11-ம் தேதி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மவாட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருவண்ணா மலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும். மேலும், அக்.12-ம் தேதி, கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (அக்.9) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி விமான நிலையம், அரியலூர் மாவட்டம் செந்துரை, சென்னை மேடவாக்கம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழை, தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி, ஒட்டப்பிடாரம், சாத்தான்குளம், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, பட்டுக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, பெனுகொண்டபுரம், பாம்பார் அணை, கடலூர் மாவட்டம் கொத்தவாச்சேரி, தருமபுரி மாவட்டம் அரூர், பென்னாகரம், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, சென்னை பள்ளிக்கரணை ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.