விழுப்புரம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுபடி, விழுப்புரம் பவர் ஹவுஸ் சாலையையொட்டி ரயில்வே இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 44 வீடுகள் இன்று (அக்.8) அகற்றப்பட்டன.
விழுப்புரம், பவர் ஹவுஸ் சாலையின் நடுவே மாரியம்மன் கோயிலும் மற்றும் சாலையை ஒட்டியுள்ள ரயில்வேக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து 44 வீடுகள் இருந்தது. இதில் 43 ஓடு மற்றும் சிமென்ட் ஷீட் வீடுகளும், ஒரு கான்கிரீட் வீடும் அடங்கும். 50 ஆண்டுக்கு மேலாக, 44 வீடுகளிலும் 3-வது தலைமுறையாக பலரும் வசித்தனர். ரயில்வே இடம் மட்டுமின்றி, நகராட்சிக்கு சொந்தமான சாலையை ஆக்கிரமித்து வீடுகளின் முகப்பு பகுதி அமைந்துள்ளது.
இதனால், பவர் ஹவுஸ் சாலை ரயில்வே கேட் அருகே உள்ள தனியார் வனஸ்பதி நிறுவனத்துக்கு சென்று வரும் கனரக வானகங்களுக்கு இடையூறு ஏற்பட்டது. மேலும் ஓட்டுநர்களுக்கும், குடியிருப்பவர்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் நடைபெற்றது. இதன் எதிரொலியாக சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மாரியம்மன் கோயில் மற்றும் ரயில்வே இடத்தில் உள்ள 44 வீடுகளை அகற்றக் கோரி தனியார் நிறுவனம் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த ஜனவரி 2024-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பலத்த எதிர்ப்பையும் மீறி, மாரியம்மன் கோயில் கடந்த ஏப்ரல் மாதம் அகற்றப்பட்டது. வீடுகளையும் காலி செய்யுமாறு ஆக்கிரமிப்பாளர்களிடம் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டது. மேலும் 44 வீடுகளை இழக்க உள்ளவர்களுக்கு, விழுப்புரம் அடுத்த திருப்பாச்சனூர் கிராமத்தில் தலா 3 சென்ட் அளவில் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டன. கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
ஆனால், வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்காததால், பவர் ஹவுஸ் சாலையிலேயே அந்த மக்கள் தொடர்ந்து வசித்தனர். மேலும், நகரப் பகுதியை விட்டு, சுமார் 8 கி.மீ., தொலைவில் உள்ள திருப்பாச்சனூர் கிராமத்துக்கு செல்ல முடியாது என மக்கள் தெரிவித்தனர். அவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையால் பலனில்லை. வீடுகளை காலி செய்ய தீபாவளி வரை கால அவகாசம் கேட்கப்பட்டது. ஏற்கெனவே, அக்டோபர் 8-ம் தேதிக்குள் வீடுகளை அகற்ற தவறினால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என மனுதாரர் எச்சரித்தால், மக்களின் கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் நிராகரித்தது.
இதனால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வீடுகளை அகற்றுவதில் ரயில்வே நிர்வாகம் முனைப்பு காட்டியது. ஆக்கிரமிக்கப்பட்ட வீடுகள் அக்டோபர் 8-ம் தேதி அகற்றப்படும் என ரயில்வே நிர்வாகம் மூலம் இறுதிகட்ட எச்சரிக்கை நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டன. காலக்கெடுவுக்கு முன்பாக வீடுகளை அகற்றிக் கொள்ள விழுப்புரம் போலீஸாரும் அறிவுறுத்தினர். அதன்படி, வீட்டில் இருந்த பொருட்களை, சம்மந்தப்பட்டவர்கள் நேற்று (அக்.7) முதல் இன்று (அக்.8) அதிகாலை வரை வெளியே கொண்டு சென்று, வீதியில் தஞ்சமடைந்தனர். ஓடுகள், இரும்பு தகடுகள் மற்றும் சிமென்ட் ஷீட்களும் அகற்றி கொள்ளப்பட்டது. பின்னர், 44 வீடுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கூடுதல் எஸ்பி தினகரன், உதவி எஸ்பி ரவிந்திரகுமார் குப்தா தலைமையிலான 200 போலீஸார் பாதுகாப்புடன் வீடுகளை அகற்றும் பணியில் ரயில்வே துறையினர் இன்று (அக்.8) ஈடுபட்டனர். கோட்டாட்சியர் முருகேசன், நகராட்சி ஆணையர் வசந்தி உள்ளிட்டோரும் இருந்தனர். வீடுகள் இடிப்பதற்கு முன்பாக வீட்டின் உள்ளே சென்ற பெண்கள், தரையில் படுத்து கதறி அழுதனர். வீடுகளை அகற்ற வேண்டாம் என வலியுறுத்தி, போலீஸாரிடம் குடியிருந்தோர் வாககுவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தினர்.
6 பொக்லைன் இயந்திரம் மூலம் 44 வீடுகளின் சுவர்கள் இடித்து தள்ளப்பட்டது. காலை 8 மணி முதல் நண்பகல் 1 மணி வரை வீடுகளை இடிக்கும் பணி நடைபெற்றது. வீடுகளை அகற்றும் பணி நிறைவு பெற்றாலும், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு தொடர்கிறது. பட்டா வழங்கப்பட்ட இடத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்க, மாவட்ட நிர்வாகமும், திமுக அரசும் துரித நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.