“நானும் அதிர்ச்சி அடைந்தேன்…” – காலணி தாக்குதல் முயற்சி குறித்து தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற வளாகத்தில் தன் மீது நடந்த காலணி தாக்குதல் முயற்சி சம்பவத்தைக் கண்டு தான் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற அறையில் நடந்த விவாதத்தின்போது இந்த விவகாரம் குறித்துப் பேசிய பி.ஆர்.கவாய், “திங்கள்கிழமை நடந்த சம்பவத்தால் நானும், எனது கற்றறிந்த சகோதரரும் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். எங்களைப் பொறுத்தவரை இது மறக்க வேண்டிய ஒரு விஷயம்” என்று தெரிவித்துள்ளார். அப்போது அருகில் இருந்த நீதிபதி உஜ்ஜல் பூயான், “இந்த விவகாரத்தில் எனக்கு சொந்த கருத்து உள்ளது. அவர் இந்தியாவின் தலைமை நீதிபதி. இது நகைச்சுவைக்கான விஷயம் அல்ல. இது அமைப்புக்கு (உச்ச நீதிமன்றத்துக்கு) ஏற்பட்ட அவமானம்” என தெரிவித்தார்.

நீதிமன்ற அறையில் இருந்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “நடந்த சம்பவம் மன்னிக்க முடியாதது. எனினும், மிகுந்த பெருந்தன்மையுடன் இந்தச் சம்பவத்தை தலைமை நீதிபதி முடித்துவைத்தது பாராட்டத்தக்கது” எனக் குறிப்பிட்டார்.

என்ன நடந்தது? – கடந்த திங்கள்கிழமை உச்ச நீதி​மன்​றத்​தில் தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் தலை​மையி​லான அமர்வு வழக்கு விசா​ரணைக்​காக கூடியது. அப்​போது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தனது காலணியை கழற்றி தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாயை நோக்கி வீசி உள்​ளார். இதையடுத்து அவர் போலீ​ஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணைக்கு பிறகு போலீஸார் அவரை விடுவித்தனர். பின்னர் அவரை பார் கவுன்சில் சஸ்பெண்ட் செய்தது.

இந்தச் சம்​பவத்​தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்​பட்​டது. விசா​ரணை தடைபட்​டது. இதனிடையே, ‘‘சனாதன தர்​மத்தை அவம​திப்​பதை சகித்​துக் கொள்ள முடி​யாது’’ என கிஷோர் கோஷமிட்​ட​தாக கூறப்படுகிறது. இதுகுறித்து தலைமை நீதிபதி கவாய் கூறும்​போது, “இத​னால் கவனத்தை சிதற விடாதீர்​கள். இவை என்னை பாதிக்​க​வில்​லை’’ என்​றார்.

உச்ச நீதி​மன்​றத்​தில் ராகேஷ் தலால் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “மத்​திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜவாரி கோயி​லில் சேதமடைந்த நிலை​யில் உள்ள விஷ்ணு சிலையை மறுநிர்​மாணம் செய்ய உத்​தர​விட வேண்​டும்’’ என கோரி​யிருந்​தார். இந்த மனு தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் தலை​மையி​லான அமர்​வில் கடந்த மாதம் விசா​ரணைக்கு வந்​ததது. அப்​போது, தலைமை நீதிபதி கூறும்​போது, “சிலை மறுநிர்​மாணம் பற்றி அந்த தெய்​வத்​திடமே கேளுங்​கள்’’ எனக் கூறி மனுவை தள்​ளு​படி செய்​தார். தலைமை நீதிபதியின் இந்த கருத்தால் உந்தப்பட்ட 71 வயது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், அவர் மீது காலணியை வீசி முயன்றுள்ளார்.

இந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உடன் தொலைபேசியில் பேசினேன். அவர் மீது நடந்த தாக்குதல் இந்தியர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது கண்டிக்கத்தக்கது’’ என பதிவிட்டிருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.