அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்மொழிந்த அமைதி ஒப்பந்தத்துக்கு இஸ்ரேலும், ஹமாஸும் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், காசாவில் முதற்கட்ட தற்காலிக போர்நிறுத்தம் அமலாகவிருக்கிறது.
இதுதொடர்பாக ட்ரம்ப்பை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “எனது நண்பர் அதிபர் ட்ரம்ப்பிடம் பேசி, வரலாற்று சிறப்புமிக்க காசா அமைதி ஒப்பந்தத்தின் வெற்றிக்காக அவரை வாழ்த்தினேன். வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட நல்ல முன்னேற்றத்தையும் மதிப்பாய்வு செய்தேன். வரும் வாரங்களில் நெருங்கிய தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.
அதே போல தனது மற்றொரு பதிவில், “எனது நண்பர் பிரதமர் நெதன்யாகுவை தொலைபேசியில் அழைத்து, அதிபர் ட்ரம்ப்பின் காசா அமைதி ஒப்பந்தத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு வாழ்த்து தெரிவித்தேன். பணயக்கைதிகள் விடுதலை மற்றும் காசா மக்களுக்கு மனிதாபிமான உதவி தொடர்பான ஒப்பந்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். உலகில் எந்த வடிவத்திலும் அல்லது வெளிப்பாட்டிலும் பயங்கரவாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினோம்” என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ராணுவம் மற்றும் காசாவின் ஹமாஸ் குழுவினர் இடையே கடந்த 2 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இந்த போருக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 20 அம்ச திட்டத்தை முன்மொழிந்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்டுள்ளகாசா மீண்டும் கட்டி எழுப்பப்படும். அந்த பகுதியில் இருந்து தீவிரவாதம் அகற்றப்படும். ஹமாஸ் குழுவின் பிடியில் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். உயிரிழந்தவர்களின் உடல்களை ஒப்படைக்க வேண்டும். போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்ட பிறகு காசாவில் இருந்து இஸ்ரேல் ராணுவம் படிப்படியாக வெளியேறும்.
ஹமாஸ் குழுவினர் ஆயுதங்களை கைவிட வேண்டும். அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும். காசாவில் இருந்து அவர்கள் பாதுகாப்பாக வெளிநாடுகளில் குடியேறலாம். காசாவை நிர்வகிக்க உள்ளூர் தலைவர்கள் அடங்கிய புதிய குழு அமைக்கப்படும். இந்த குழுவில் ஹமாஸ் தலைவர்களுக்கு இடம் கிடையாது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் உள்ளிட்டோர் அடங்கிய சர்வதேச குழுவின் வழிகாட்டுதலின்படி புதிய குழு காசாவை நிர்வகிக்கும். காசாவில் சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்படும்.சர்வதேச முதலீடு அதிகரிக்கப்படும். வேலைவாய்ப்புகள் பெருக்கப்படும். ஐஎஸ்எப் என்ற சர்வதேச படை காசாவில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் என்பன உள்ளிட்ட திட்டத்தை அதிபர் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். இந்த அமைதி ஒப்பந்தத்துக்கு இஸ்ரேலும், ஹமாஸும் ஒப்புக் கொண்டுள்ளன.