சபரிமலை தங்க முலாம் விவகாரம்: தேவசம் அமைச்சர் பதவி விலக கோரி கேரள சட்டப்பேரவையில் கடும் கூச்சல் குழப்பம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் துவாரபாலகர் சாமி சிலையில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகளில் முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டையடுத்து தேவசம் அமைச்சர் வி.என். வாசவன் பதவி விலக கோரி கேரள சட்டப்பேரவையில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சியினர் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.

சபரிமலையில் ஐயப்பன் சந்நிதியில் உள்ள துவாரபாலகர் சிலைகளுக்கு தங்கமுலாம் பூசுவதில் முறைகேடுகள் நடந்ததாக ஆளும் இடதுசாரி அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டியுள்ளன. இந்த விவகாரத்தை முன்வைத்து கடந்த 4 நாட்களாக கேரளசட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தால் சபாநாயகர் ஏ.என். ஷம்சீர், சபையை சிறிது நேரம் ஒத்திவைத்தார். அதன்பிறகு ஐக்கிய ஜனநாயக முன்னணி அவை நடவடிக்கைகளை புறக்கணித்து வெளியேறியது. அப்போது, எதிர்க்கட்சி எம்எல்ஏக்களுக்கும் சட்டப்பேரவை கண்காணிப்பு பணியாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீஷன் கூறும்போது, “ பேரவைத் தலைவர் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்கிறார். அசல் சிலைகளை கணிசமான தொகைக்குவிற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவசம் அமைச்சர் வி.என். வாசவன் பதவி விலக வேண்டும்.

திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தை கலைக்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்” என்றார்.பேரவை தலைவர் மேடைக்கு அருகில் “தங்கம் தாமிரமாக மாறியது” என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி ஆளும் கட்சிக்கு எதிராக கோஷங்களை எதிர்க்கட்சியினர் எழுப்பினர். இதையடுத்து அவை மரபை மீறியதாகரோஜி எம். ஜான், எம். வின்சென்ட், சனீஷ்குமார் ஜோசப் ஆகிய 3 யுடிஎப்எம்.எல்.ஏக்கள் எஞ்சிய கூட்டத்தொடரிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதனிடையே சபரிமலை தங்கத் தகடுகள் திருடப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை கண்டித்து இடதுசாரி அரசுக்கு எதிரான போராட்டத்தை பாஜக தீவிரப்படுத்தியுள்ளது. கோழிக்கோட்டில் பாஜக தலைவர் கே.சுரேந்திரன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நேற்று பேரணியாக சென்ற பாஜகவினரைபோலீஸார் தடுத்து நிறுத்தினர். ஆனால் தடுப்புகளை உடைத்து முன்னேற முயன்றதையடுத்து போலீஸார் தண்ணீரை பீய்ச்சியடித்து கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவத்தில் பலர் கைது செய்யப்பட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.