கோவை: தமிழகத்தின் புத்தொழில் சூழலை வலுப்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீட்டில் ‘இணை உருவாக்க நிதியம்’ தொடங்கப்படும் என்று கோவையில் நேற்று தொடங்கிய உலகளாவிய ‘ஸ்டார்ட்அப்’ மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
‘ஸ்டார்ட் அப்’ தமிழ்நாடு சார்பில், உலகளாவிய ‘ஸ்டார்ட் அப்’ இரண்டு நாள் மாநாடு கோவையில் நேற்று தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில், எண்ணற்ற தொழில் திட்டங்களை தமிழகம் ஈர்த்துள்ளது. முந்தைய ஆண்டுகளில் இருந்ததைவிட 6 மடங்கு புத்தொழில் நிறுவனங்கள் கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசின் தளத்தில் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 50 சதவீதம், பெண்கள் தலைமையேற்று நடத்தும் நிறுவனங்கள் ஆகும்.
சிறந்த புத்தொழில் கட்டமைப்பு கொண்ட மாநிலங்களின் தரவரிசையில் கடந்த 2018-ம் ஆண்டு கடைசி நிலையில் இருந்த தமிழகம் நான்கே ஆண்டுகளில், அதாவது 2022-ல் முதல் இடத்துக்கு உயர்ந்துள்ளது. ‘ஸ்டார்ட் அப் ஜீனோம்’ அமைப்பு வெளியிட்ட ‘உலகளாவிய புத்தொழில் சூழமைவு அறிக்கை 2024’-ன்படி, ஆசிய அளவில் 18-வது இடத்தில் சென்னை உள்ளது. தமிழக புத்தொழில் நிறுவனங்களின் முதலீடு திரட்டும் திறன் கடந்த 2016-ல் 1 மில்லியன் டாலராக இருந்தது. 2024-ல் இது 6 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக ‘இன்க் 42’ அறிக்கை தெரிவிக்கிறது. 2020-25 நிதி ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்துடிபிஐஐடி தளத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 36 சதவீதம் கூட்டு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இது தேசிய சராசரியான 11 சதவீதத்தைவிட 3 மடங்கு அதிகம்.
2021-24 காலகட்டத்தில் சென்னையை மையமாக கொண்ட உயர் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகளின் மதிப்பு 66 சதவீதம் ஆண்டு கூட்டு வளர்ச்சியை அடைந்துள்ளது. தேசிய அளவில் இது 2-வது இடம். தொடக்க நிலை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் நிதி உதவி கிடைக்காமல் தங்கள் முயற்சியை கைவிடக்கூடாது என்பதற்காக ‘டான் சீட்’ என்ற ஆதாரநிதி வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். இந்த நிதி ஆண்டில், இத்திட்டத்துக்கு மட்டும் ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்டியலின, பழங்குடியின தொழில் முனைவோர் நிர்வகிக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு பங்கு முதலீடு மட்டுமின்றி, தேவையான தொழில் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. இதற்காக, 2022-23-ல் ரூ.30 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2023-24-ல் ரூ.50 கோடியாக உயர்த்தியுள்ளோம்.
‘டான் பண்ட்’ என்ற முதலீட்டாளர் இணைப்பு தளத்தை கடந்த ஆண்டு தொடங்கி வைத்தேன். இதன்மூலம் புத்தொழில் நிறுவனங்கள் ரூ.129.24 கோடி நிதி திரட்டியுள்ளன.இந்த மாநாட்டில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 250-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 21 நாடுகள் அரங்கு அமைத்துள்ளன. புத்தொழில் நிறுவனங்களுக்காக 40 நாடுகளின் பங்களிப்போடு ஒரு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது நாட்டிலேயே இது முதல் முறை.
புத்தொழில் சூழல் மேம்பாட்டுக்கான வழிகாட்டி செயல் திட்டங்கள் உள்ளடக்கிய 2-ம் தொகுப்பு சில வாரங்களில் வெளியிடப்படும். தமிழகத்தில் புத்தொழில் சூழலை வலுப்படுத்தும் விதமாக ரூ.100 கோடி ஒதுக்கீட்டில் ‘இணை உருவாக்க நிதியம்’ தொடங்கப்படும். இது தமிழ்நாடு புத்தொழில், புத்தாக்க இயக்கத்தால் நிர்வகிக்கப்படும். இதனால், புதிய துணிகர முதலீட்டு நிறுவனங்கள் உருவாகும். உலக அளவில் முன்னணியில் உள்ள முதலீட்டு நிறுவனங்களை தமிழகம் நோக்கி ஈர்ப்பதற்கும் வழிவகுக்கும். கோவையின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் திராவிட மாடல் அரசின் பயணம், திராவிட மாடல் 2.0-விலும் தொடரும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
முதல்வர் முன்னிலையில் பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மாற்றுத் திறனாளிகளால் அமைக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு முழு மானியத்துடன் கூடிய அனுமதிஆணைகளை முதல்வர் வழங்கினார். தமிழகத்தின் தொழில் துறை வளர்ச்சியை பாராட்டி உகாண்டா அமைச்சர் மோனிகா, சுவிஸ் எம்.பி.நிக்கலஸ் சாமுவேல் பேசினர். அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், தா.மோ.அன்பரசன், டிஆர்பி. ராஜா, மத்தியமின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலர் எஸ்.கிருஷ்ணன், தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் துறை செயலர் அதுல் ஆனந்த், பல்வேறு தொழில் நிறுவன உயர் அதிகாரிகள், பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஸ்டார்ட்அப் மாநாடு இன்று நிறைவடைகிறது.