கிராமசபை கூட்டங்களில் மக்கள் முன்வைக்கும் தீர்மானம் திட்டங்களாக மாறும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி 

சென்னை: கிராமசபைக் கூட்டத்தில் மக்கள் முன்வைக்கும் ஒவ்வொரு பரிந்துரையும், தீர்மானங்களும் முறையாக பரிசீலிக்கப்பட்டு, திட்டங்களாக நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

தமிழகத்தின் 12,480 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார். 6 கிராமங்களை சேர்ந்த மக்களிடம் நேரலையில் கருத்துகளைக் கேட்டறிந்தார். இந்த கூட்டங்களில், குடியிருப்புகள், சாலைகள், தெருக்களின் சாதிப் பெயர்களை நீக்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘தாயுமானவர்’ திட்டத்தின்கீழ் பயனாளிகளை அடையாளம் கண்டு, நலிவுநிலை குறைப்பு திட்டம் தயாரித்து ஒப்புதல் பெறப்பட்டது. இதுதவிர, ‘நம்மஊரு, நம்ம அரசு’ திட்டத்தில் கண்டறியப்பட்ட தேவைகள் உள்ளிட்ட பல்வேறு அறிக்கைகள், திட்டங்கள் உட்பட 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக பேசியதாவது: நாட்டின் முதுகெலும்பாக திகழும் கிராமங்களை முன்னேற்றவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும், கிராம நிர்வாகத்தை வலிமையாக்கவும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த கிராமசபைக் கூட்டத்தில் குடியிருப்புகள், சாலைகள், தெருக்களில் இழிவான தன்மையோடு சாதிப் பெயர்கள் இருந்தால், அதை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மேலும், ‘நம்ம ஊரு, நம்ம அரசு’ என்ற பெயரில், கிராமசபையில் மக்கள் கலந்துபேசி, 3 முக்கிய தேவைகளை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அந்த தேவைகள் உடனடியாக நிறைவேற்றப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 99,453 வீடுகள் கட்டி முடித்து பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு திட்டங்களின்கீழ் 21,000 கி.மீ. நீளத்துக்கு சாலைகள், பாலங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், அடிப்படை வசதிகளும், தாயுமானவர் திட்டத்தில் பெண்கள், குழந்தைகள் நலனும் மேம்படுத்தப்படுகிறது.

திட்டங்களை அரசு செய்தாலும், குடிமக்களாக ஒவ்வொரு தனி நபருக்கும் பொறுப்புகள் உள்ளன. அதை சரியாகசெய்து, நாம்தான் நமது கிராமத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். வீடுதோறும் குழந்தைகள் படிப்பதை உறுதி செய்ய வேண்டும். குழந்தை தொழிலாளர்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்து அவர்களை மீட்க வேண்டும்.

கிராமங்களை சுத்தமாக வைத்துக் கொள்வதில் யாரும் அலட்சியம் காட்டக் கூடாது. மருத்துவ அலுவலர்கள், ஊராட்சி நிர்வாகம் ஒருங்கிணைந்து செயல்பட்டால், கிராம மக்களின் ஆரோக்கியம் மேம்படும். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும். மக்கும், மக்காத குப்பையை தனித்தனியாக பிரித்து போட வேண்டும். இவ்வாறு சிறிய விஷயங்களை சரியாக செய்தாலே, பெரிய நன்மைகள் கிடைக்கும். மக்களிடம் காலநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தண்ணீர் பற்றாக்குறையை தவிர்க்க, மழைநீர் சேகரிப்பு அவசியம். இதற்காக அரசும், ஊராட்சிகளும் எடுக்கும் முயற்சிகளுக்கு மக்கள் ஆதரவு தரவேண்டும்.

அனைத்து ஊராட்சிகளிலும், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.கிராம ஊராட்சிகளின் நிர்வாகம், நிதிமேலாண்மை வெளிப்படையாக இருக்கவேண்டும். கிராமசபையில் மக்களிடம் கணக்குகள் விளக்கப்பட்டு, அவர்களது ஒப்புதலோடு செயல்பட வேண்டும். செலவு குறித்த விவரங்களை மக்களிடம் பகிர வேண்டும். நூறு நாள் வேலை திட்ட வரவு செலவுகணக்குகள், எத்தனை பேருக்கு வேலை வழங்கப்பட்டது என்பது வெளிப்படையாக இருக்க வேண்டும்.

கிராமசபைக் கூட்டத்தில் நீங்கள் முன்வைக்கும் ஒவ்வொரு பரிந்துரையும், தீர்மானங்களும் முறையாக பரிசீலிக்கப்பட்டு, திட்டங்களாக நிறைவேற்றப்படும். ‘கிராமத்தின் வலிமைதான் மாநிலத்தின் வலிமை’ என்று நமது செயல்பாடுகளால் நிரூபித்துக் காட்டுவோம்.இவ்வாறு முதல்வர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.