புதுடெல்லி: பிரதமரின் தானிய வேளாண் திட்டம் மற்றும் தற்சார்பு பருப்பு உற்பத்தி திட்டம் என்ற இரு பெரிய வேளாண் திட்டங்களை ரூ. 34,440 மதிப்பில் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். ரூ.5,450 கோடி மதிப்பில் கால்நடை வளர்ப்பு, மீன்வளம் மற்றும் உணவு பதப்படுத்துதல் திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
லோக்நாயக் ஜெய்பிரகாஷ் நாராயணின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் சிறப்பு வேளாண் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், பயிர் வகைகளின் உற்பத்தியை விரிவாக்கவும், நீடித்த மற்றும் நிலையான வேளாண் முறைகளை பின்பற்றவும், பஞ்சாயத்து மற்றும் வட்டார அளவில் அறுவடை செய்யப்படும் பயிர்களை சேமிக்கவும், நீர்ப்பாசன திட்டங்களை விரிவுபடுத்தவும், தேர்வு செய்யப்பட்ட 100 மாவட்டங்களில் நீண்ட கால மற்றும் குறுகிய கால பயிர்கடன் வசதிகள் கிடைக்கவும் பிரதமரின் தானிய வேளாண் திட்டம் ரூ.24,000 கோடி மதிப்பில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
பருப்பு உற்பத்தியை மேம்படுத்தவும், பருப்பு உற்பத்தி செய்யப்படும் நிலங்களின் அளவை விரிவுபடுத்தவும், பருப்பு கொள்முதல், சேமிப்பு மற்றும் பதப்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் ரூ.11,440 கோடி மதிப்பில் தற்சார்பு பருப்பு உற்பத்தி திட்டத்தையும் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த சிறப்பு வேளாண் திட்டத்தில் விவசாயிகளுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடினார். வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மீன்வளம் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறைகளில் ரூ.5,450 கோடிக்கு மேலான திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ரூ.815 கோடி மதிப்பிலான கூடுதல் வேளாண் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
பெங்களூருவில் செயற்கை கருவூட்டல் பயிற்சி மையம், குஜராத்தின் அம்ரேலி மற்றும் பனாஸ் பகுதியில் சீர்மிகு மையம், ராஷ்ட்ரிய கோகுல் திட்டத்தின் கீழ் அசாமில் செயற்கை கருவூட்டல் பரிசோதனைக் கூடம், மெஹ்சனா, இந்தூர் மற்றும் பில்வாரா பகுதியில் பால் பவுடர் தயாரிப்பு மையங்கள், அசாம் தேஸ்பூரில் மீன் உற்பத்தி நிலையம், வேளாண் பொருட்கள் பதப்படுத்துதல் மையங்கள், குளிர்சாதன கிடங்குகள், மற்றும் மதிப்புகூட்டு கட்டமைப்புகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
ஆந்திராவின் கிருஷ்ணாவில் ஒருங்கிணைந்த குளிர்சாதன கிடங்கு, மதிப்பு கூட்டு கட்டமைப்பு, உத்தராகண்டில் நன்னீர் மீன் வளர்ப்பு, நாகாலாந்தில் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு பூங்கா, புதுச்சேரி காரைக்காலில் ஸ்மார்ட் மற்றும் ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகம், ஒடிசாவின் ஹிராகுட் நகரில் ஒருங்கிணைந்த மீன் பண்ணை ஆகியவற்றுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
இயற்கை வேளாண்மைக்கான தேசிய திட்டத்தின் கீழ் 50,000 விவசாயிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. கிராமங்களில் 38,000 பேருக்கு, வேளாண் தொடர்பான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.