அபுதாபி,
ஆப்கானிஸ்தான் – வங்காளதேசம் இடையிலான 3டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் முத்லைல் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வங்காளதேசம் வென்றது. தொடர்ந்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 44.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 190 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக இப்ராஹிம் சட்ரான் 95 ரன் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் மெஹதி ஹசன் மிராஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து 191 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேசம் 28.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 109 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 81 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என ஆப்கானிஸ்தான் கைப்பற்றிவிட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி வரும் 14ம் தேதி நடக்கிறது.