காபூல்: சனிக்கிழமை (அக்.11) அன்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு எல்லையோர பகுதியில் இருதரப்புக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் தலிபான் படையினர் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் மேற்கொண்டனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த ராணுவ வீரர்கள் 15 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்மையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மீது பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி தரும் வகையில் தலிபான் படையினர் பதில் தாக்குதல் மேற்கொண்டனர்.
“ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் இரவு நேரத்தில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் எங்களது படையினர் செயல்பட்டனர். எங்கள் வான் எல்லையில் அத்துமீறி தாக்குதலை பாகிஸ்தான் மேற்கொண்டது. அதற்கு பதிலடி கொடுத்தோம். இந்த தாக்குதல் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு முடிவுக்கு வந்தது. எதிர்தரப்பு எங்கள் வான் எல்லையில் தாக்குதலை தொடர்ந்தால் அதை இடைமறிப்போம். மேலும், அவர்களுக்கு தக்க பதிலடி தர எங்கள் பாதுகாப்பு படையினர் தயாராக உள்ளனர்” என ஆப்கன் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இனாயத்துல்லா தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் 15 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: “பஹ்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள துராந்த் எல்லை பகுதியில் ஆப்கன் பாதுகாப்பு படையினர் நேற்று இரவு பதில் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பாகிஸ்தானின் 3 ராணுவ நிலையை எங்கள் படையினர் கைப்பற்றினர்” என ஹெல்மண்ட் மாகாண அரசின் செய்தித் தொடர்பாளர் மவ்லவி முகமது காசிம் ரியாஸ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் சொல்வது என்ன? – சனிக்கிழமை இரவு பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையோர பகுதியில் சுமார் ஆறு இடங்களில் இரு தரப்பும் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆப்கனில் உள்ள தலிபான் படையினரின் ராணுவ நிலையை தாக்கி உள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இரவு வானத்தை ஒளிர செய்யும் வகையிலான துப்பாக்கி சூடு தாக்குதல் குறித்த வீடியோ காட்சியை பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் பகிர்ந்துள்ளனர்.
பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் சுமார் 2,600 கிலோ மீட்டர் நீளம் கொண்ட எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. இந்தியாவின் ஆதரவுடன், பாகிஸ்தானை தாக்கும் நோக்கத்தில் பாகிஸ்தானை சேர்ந்த தலிபான்களுக்கு ஆப்கன் தலிபான் நிர்வாகம் அடைக்கலம் அளிப்பதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு வைத்துள்ளது. இதை இந்தியா மறுத்துள்ளது.
இந்நிலையில், காபூலில் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட தலிபான் தலைவர் வாகனத்தில் செல்வதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு அண்மையில் தாக்குதல் மேற்கொண்டோம். அதில் அவர் உயிர்பிழைத்தாரா என்பது எங்களுக்கு உறுதிபட தெரியவில்லை என பாகிஸ்தான் நாட்டு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சர்வதேச செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.